திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 237 ஆக உயர்வு
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 237 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர்,
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் பல நாடுகளில் கோர தாண்டவத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் பல நாடுகளில் கொரோனா பாதிப்பவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து ஊரடங்கு விதிக்கப்பட்டு வருகிறது.
தற்போது 6-வது கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை இருக்கிறது. இருப்பினும் கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை. குறிப்பாக தமிழகத்தில் சென்னையில் தான் அதிகளவு பாதிப்பு இருந்து வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 3 ஆயிரத்து 616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு இருந்தது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 17 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
237 ஆக உயர்வு
இது குறித்து திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மேல்சிகிச்சைக் காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருப்பூர் காலேஜ் ரோடு டி.வி.நகரை சேர்ந்த 58 வயது ஆண், பெருமாநல்லூர் தட்டான்குட்டையை சேர்ந்த 30 வயது ஆண், திருப்பூர் அண்ணாத்துரை காம்பவுண்டை சேர்ந்த 23 வயது பெண், தாராபுரம் ரோடு சந்திராபுரத்தை சேர்ந்த 25 வயது பெண், வெள்ளியங்காடு ஈஸ்வரமூர்த்திநகரை சேர்ந்த 55 வயது ஆண், குன்னத்தூர் ஆதியூரை சேர்ந்த 63 வயது ஆண்.
குன்னத்தூர் பல்லகவுண்டன்பாளையத்தை சேர்ந்த 28 வயது கர்ப்பிணி, திருப்பூர் சிவசுப்பிரமணியம்நகரை சேர்ந்த 29 வயது பெண், திருப்பூர் அருண்நகரை சேர்ந்த 33 வயது ஆண், குண்டடம் சக்திவிநாயகபுரத்தை சேர்ந்த 67 வயது ஆண், கே.செட்டிபாளையத்தை சேர்ந்த 38 வயது ஆண், சிக்கண்ணா காலேஜ்ரோட்டை சேர்ந்த 36 வயது ஆண், காங்கேயம் ரோட்டை சேர்ந்த 28 வயது ஆண், ராக்கியாபாளையம் செந்தில்நகரை சேர்ந்த 31 வயது பெண், நல்லாத்துப்பாளையம் தங்கம்நகரை சேர்ந்த 21 வயது ஆண், சாமுண்டிபுரம் ராஜூவ்நகரை சேர்ந்த 53 வயது ஆண், அலகுமலையை சேர்ந்த 58 வயது ஆண் ஆகிய 17 பேருக்கு நேற்று கொரோனா இருப்பதை உறுதி செய்துள்ளோம்.
இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 120 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோல் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் 10 பேர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 237 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்ட 17 பேர்களில் 12 பேர் மாநகர பகுதிகளுக்கு உட்பட்டவர்கள்.
Related Tags :
Next Story