கர்நாடகத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு மத்திய குழு பரிந்துரையை ஏற்று நடவடிக்கை


கர்நாடகத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு மத்திய குழு பரிந்துரையை ஏற்று நடவடிக்கை
x
தினத்தந்தி 9 July 2020 12:00 AM GMT (Updated: 8 July 2020 4:49 PM GMT)

கர்நாடகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு தொடர்பாக பெங்களூருவில் முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று அவசர கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

ஆலோசனை கூட்டம்

இதனால் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக தினமும் நூற்றுக்கணக்கானோர் குவிந்து வருகிறார்கள். இதனால் பல ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் காலியாக இல்லை. இதன் காரணமாக கொரோனா பாதித்தவர்களை அங்கு அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கொரோனா கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்படுவது மற்றும் படுக்கைகளை நிர்வகிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர், முதல்-மந்திரியின் அரசியல் செயலாளர் எஸ்.ஆர்.விஸ்வநாத் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடியூரப்பா பேசும்போது, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் விஷயத்தில் குழப்பங்களை தவிர்க்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த கூட்டத்திற்கு பிறகு மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்போது பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று எங்களுக்கு தெரியும். ஆனால் எங்களுக்கு வந்த தகவல், இந்த அளவுக்கு பாதிப்பு அதிகரிக்கும் என்று உணர்த்தவில்லை. இவ்வளவு பாதிப்பு இந்த மாத இறுதியில் ஏற்படும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் சற்று முன்னதாகவே அந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அனைத்து அம்சங்கள்

இதை எதிர்கொள்ள நாங்கள் அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். அதனால் பொதுமக்கள் பயப்பட தேவை இல்லை. கொரோனா கண்காணிப்பு மையங்களில் படுக்கைகள் குறித்து முதல்-மந்திரிக்கு தகவல் தெரிவித்துள்ளோம். பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் 10 ஆயிரம் படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதை முதல்-மந்திரி எடியூரப்பா நாளை (அதாவது இன்று) நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.

அங்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி உணவு, தூய்மை, டாக்டர்கள், துணை மருத்துவ ஊழியர்களை நியமிப்பது போன்ற வசதிகளை ஏற்படுத்துவது உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தயாராக இருங்கள்

2,000 படுக்கைகளுடன் கொரோனா கண்காணிப்பு மையம் ஏற்கனவே பணியை தொடங்கிவிட்டது. அங்கு தினமும் 200 முதல் 300 நோயாளிகள் சேர்க்கப்படுகிறார்கள். அவர்கள் 10 நாட்களில் குணம் அடைந்து வீடு திரும்புகிறார்கள். அறிகுறியற்ற கொரோனா பாதித்தவர்களை கொரோனா கண்காணிப்பு மையங்களுக்கு அழைத்து வர ஆம்புலன்ஸ் தேவை இல்லை.

அவர்களுக்கு வேறு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. படுக்கைகள் காலியாக இருப்பது மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் குறித்த தகவல்கள் போர் அலுவலகத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், போர் அலுவலகத்தில் இருந்து அவர்களை தொடர்பு கொண்டு, ஆஸ்பத்திரிக்கு செல்ல ஆம்புலன்ஸ் வருகிறது, தயாராக இருங்கள் என்று தகவல் தெரிவிக்கப்படும். அவர்களின் உடல்நிலையை பொறுத்து கொரோனா ஆஸ்பத்திரிக்கோ அல்லது கொரோனா கண்காணிப்பு மையங்களுக்கோ அழைத்து செல்லப்படுவார்கள்.

1,000 டாக்டர்கள்

முதல்-மந்திரி எடியூரப்பா, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும், குழப்பங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்றும் எங்களிடம் கூறினார். 10 ஆயிரம் படுக்கைகளை கொண்ட கொரோனா கண்காணிப்பு மையத்திற்கு 1,000 டாக்டர்கள் தேவைப்படுகிறார்கள். இது தொடர்பாக ஒரு கூட்டம் கூட்டப்பட்டு உள்ளது. அதில் இதுபற்றி விவாதிக்கப்படும்.

மத்திய குழு கர்நாடகத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தவும் பரிந்துரை செய்தது. இதை ஏற்ற முதல்-மந்திரி, கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகளை மேலும் தீவிரமாக அமல்படுத்தவும் உத்தரவிட்டு உள்ளார். பெங்களூருவுக்கு ஏற்கனவே 400 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மேலும் 100 ஆம்புலன்சுகளை பெங்களூருவுக்கு வழங்கும்படி அதிகாரிகளுக்கு எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

நோயாளிகளுக்கு எதிராக அல்ல

சில கிராமங்களில், பெங்களூருவில் இருந்து வருகிறவர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். நாம் கொரோனாவுக்கு எதிராக போராட வேண்டுமே தவிர, கொரோனா நோயாளிகளுக்கு எதிராக அல்ல என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இது பெரிய வைரஸ் ஒன்றும் இல்லை.

இவ்வாறு மந்திரி சுதாகர் கூறினார்.

Next Story