புளியங்குடியில் காட்டு எருமை தாக்கி விவசாயி பலி உறவினர்கள் மறியல் போராட்டத்தால் பரபரப்பு


புளியங்குடியில் காட்டு எருமை தாக்கி விவசாயி பலி உறவினர்கள் மறியல் போராட்டத்தால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 July 2020 4:30 AM IST (Updated: 9 July 2020 12:14 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடியில் காட்டு எருமை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு நிவாரணம் கேட்டு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

புளியங்குடி, 

புளியங்குடியில் காட்டு எருமை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு நிவாரணம் கேட்டு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விவசாயி

புளியங்குடி காயிதே மில்லத் நகர் 4-ம் தெருவை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (வயது 71) விவசாயி. புளியங்குடி மேற்கு பகுதியில் மணக்கடையார்கோவில் அருகில் இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது.

நேற்று காலை சாகுல்ஹமீது, தோட்டத்திற்கு விவசாய வேலைக்காக சென்றார். அப்போது தோட்டத்தில் பதுங்கியிருந்த காட்டு எருமை அவரை பலமாக தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இதனால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் வனவிலங்குகளால் தொடர்ந்து உயிரிழப்பு, காயங்கள் ஏற்படுவதை கண்டித்தும், பலியான விவசாயி சாகுல்ஹமீது குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோர் நேற்று காலை புளியங்குடி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ், கடையநல்லூர் தாசில்தார் பாலசுப்பிரமணியன், புளியங்குடி வனசரகர் ஸ்டாலின், மாவட்ட வன அதிகாரி செந்தில்குமார் மற்றும் போலீசார் வந்தனர்.

பேச்சுவார்த்தை

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஏற்பட்ட உடன்பாட்டின் படி பலியானவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்குவது என்று முடிவெடுத்து, அதில் ரூ.50 ஆயிரம் உடனடியாக கொடுக்கப்பட்டது. மீதியுள்ள அவர்களது கோரிக்கைகளை மாவட்ட கலெக்டர் மூலமாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது என முடிவு எடுக்கப்பட்டது. பின்னர் அவர்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் செய்யது சுலைமான், நகரத்தலைவர் அப்துல்வகாப், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பஷீர் ஒலி, துணை செயலாளர் அப்துல்ரகுமான், எஸ்.டி.பி.ஐ நகர தலைவர் அகமது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story