ஈரோடு மாவட்டத்தில் 64 இடங்களில் வசிக்கும் 18,600 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்: கலெக்டர் கதிரவன் தகவல்


ஈரோடு மாவட்டத்தில் 64 இடங்களில் வசிக்கும் 18,600 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்: கலெக்டர் கதிரவன் தகவல்
x
தினத்தந்தி 8 July 2020 11:15 PM GMT (Updated: 8 July 2020 6:59 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் 64 இடங்களில் வசிக்கும் 18 ஆயிரத்து 600 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.

ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் மூலம் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா முதல் அலையின் போது ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 70 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் ஒருவர் இறந்துவிட்ட நிலையில் 69 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். அப்போது ஈரோடு மாவட்டத்தில் 18 இடங்களில் வசித்த 32 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். பின்னர் கொரோனா தாக்கம் குறைந்ததும் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். மேலும் ஈரோடு மாவட்டம் பச்சை மண்டலமாகவும் மாறியது.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலை மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. 70 என்ற எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து நேற்று முன்தினம் 286 ஆக உயர்ந்தது. இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் 64 இடங்களில் உள்ள 18 ஆயிரத்து 600 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள்.

இந்த நிலையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் 5 பேர் இறந்துவிட்ட நிலையில், 192 பேர் சிகிச்சையில் உள்ளனர். 89 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தொற்று பாதித்த 286 பேரில் 33 பேர் மட்டும் கிராமப்பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதியில் உள்ளவர்கள்.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 43 ஆயிரத்து 178 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் ஒரு நாளில் மட்டும் 1,078 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் வெளி மாநிலங்களில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு வந்த 2 ஆயிரத்து 954 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 2 ஆயிரத்து 903 பேருக்கு தொற்று இல்லை என உறுதியானது. மீதமுள்ள 51 பேருக்கு பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை.

இதேபோல் பிற மாவட்டங்களில் இருந்து ஈரோடு வந்த 8 ஆயிரத்து 684 பேரில், 22 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதியானது. 59 பேரின் பரிசோதனை முடிவு இன்னும் வரவில்லை. வெளிநாடுகளில் இருந்து வந்த 10 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. மொத்தத்தில் வெளியிடங்களில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு வந்த 11 ஆயிரத்து 648 பேரில், 22 பேர் தவிர மற்றவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகர் பகுதி, கோபி, பவானி, மொடக்குறிச்சி என 64 இடங்களில் வசிக்கும் 18 ஆயிரத்து 600 பேர் தங்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. எனினும் தினமும் 1,200-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

Next Story