வருகிற 13-ந் தேதி அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்


வருகிற 13-ந் தேதி அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
x
தினத்தந்தி 8 July 2020 11:30 PM GMT (Updated: 8 July 2020 7:03 PM GMT)

அரசு பள்ளி மாணவர்களுக்கு வருகிற 13-ந் தேதி பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

நம்பியூர், 

ஈரோடு மாவட்டம் நம்பியூரில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட பணிகளை சிறப்பான முறையில் செய்து வருகிறது. 12-ம் வகுப்பில் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்வு வைக்கப்படும். அதற்கான தேதி இன்று (வியாழக்கிழமை) மாலை அறிவிக்கப்படும்

11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டம் கடந்த ஆண்டு இருந்த நடைமுறையே பின்பற்றப்படும்.

வருகிற 13-ந் தேதி அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்கப்படும். இந்த பணியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். கூரியர் மூலமாக அல்லது பாடப்புத்தகங்கள் நேரடியாகவே வழங்கப்படும்.

மாணவ-மாணவிகளுக்கு பாடபுத்தகங்கள் வழங்கப்பட்ட பின்னர் 5 தனியார் சேனல்கள் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படும்.

தேசிய கல்வி கொள்கையை முழுமையாக தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் விரிவான விளக்கம் அளித்துள்ளார்.

காலாண்டு, அரையாண்டு தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் அளிப்பது என்பதற்கு பல கருத்துக்கள் வந்துள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 முதல் 10 மாணவர்கள் உள்ளனர். துறை அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்களுடன் கலந்து ஆலோசனை செய்த பிறகு முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று முடிவுகள் எடுக்கப்படும்.

முழுமையாக பள்ளிக்கு வராத மாணவர்கள் பட்டியல் தயார் செய்த பின் பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும்.

34,482 மாணவர்கள் 12-ம் வகுப்பு இறுதி தேர்வு எழுதவில்லை. அதில் 718 மாணவர்கள் மட்டுமே மீண்டும் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர். மற்ற மாணவர்களும் தேர்வு எழுதலாம். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தேர்வு முடிந்த 4 நாளில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். நீட்தேர்வுக்கான பயிற்சி தொடர்ந்து நடைபெறுகிறது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.


Next Story