கிராமங்களில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


கிராமங்களில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 8 July 2020 11:30 PM GMT (Updated: 8 July 2020 7:51 PM GMT)

கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி, 

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 2020-2021-ம் ஆண்டுக்குள் ஊரக பகுதியில் உள்ள ஒரு லட்சத்து 18 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவது தொடர்பாக மாவட்ட அளவிலான குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 2024-ம் ஆண்டுக்குள் ஊரக பகுதியில் குடியிருக்கும் அனைவருக்கும் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்க அறிவுறுத்தி உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 2020-2021 ஆண்டில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 136 பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட 560 கிராமங்களில் உள்ள 1 லட்சத்து 18 ஆயிரத்து 739 வீடுகளுக்கு குடிநீர் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் பொது கட்டிடங்கள், ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்களும், அங்கன்வாடி கட்டிடம் குறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலரும், மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் குறித்து செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை கட்டிடம், கட்டுமானம் அதிகாரியும், கால்நடைகள் தொடர்பாக கால்நடைத்துறை இணை இயக்குனரும் கணக்கெடுப்பு பொறுப்பு அலுவலர்களாக செயல்படுவார்கள்.

ஒருங்கிணைந்து...

மேலும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை இணைந்து தேர்வு செய்யப்பட்டு உள்ள கிராமங்களில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் வழங்கிட திட்டமிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமத்தில் தற்போது பயன்படுத்தப்படும் குடிநீரின் அளவை தெரிந்து கொண்டு தேவைக்கேற்ப குடிநீர் வழங்குவதையும், மக்கள் தொகை அதிகம் உள்ள கிராமத்துக்கு அதிக அளவில் குடிநீர் வழங்கும் வகையில் திட்டமிட வேண்டும். மத்திய அரசு தெரிவித்துள்ள ஜல் ஜீவன் மிஷன் திட்டப்படி நடப்பு ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு செய்துள்ள கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை மாவட்ட அளவிலான குழு உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) பிரித்திவிராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் சம்பத், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் பாலசுப்பிரமணியன், முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) உமாசங்கர், செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை (கட்டிடம் மற்றும் கட்டுமானம்) ஜெயராமன், இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை) முகைதீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சங்கரஜோதி, நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் வெங்கடேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story