மும்பையில் பரபரப்பு அம்பேத்கர் வசித்த வீடு மீது தாக்குதல் விசாரணைக்கு முதல்-மந்திரி உத்தரவு


மும்பையில் பரபரப்பு அம்பேத்கர் வசித்த வீடு மீது தாக்குதல் விசாரணைக்கு முதல்-மந்திரி உத்தரவு
x
தினத்தந்தி 8 July 2020 11:45 PM GMT (Updated: 8 July 2020 10:38 PM GMT)

மும்பையில் உள்ள அம்பேத்கர் வசித்த வீடு மீது மர்மஆசாமி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை, 

மும்பையில் உள்ள அம்பேத்கர் வசித்த வீடு மீது மர்மஆசாமி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

அம்பேத்கர் வீடு

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பங்களா வீடு மத்திய மும்பை தாதரில் உள்ள இந்து காலனியில் அமைந்துள்ளது. 2 மாடிகளை கொண்ட பாரம்பரிய கட்டிடமான அம்பேத்கரின் இந்த வீடு ‘ராஜ்குரு' என அழைக்கப்படுகிறது.

அம்பேத்கர் 20 வருடங்களாக இந்த ராஜ்குரு பங்களா வீட்டில் தான் வசித்து வந்தார். இந்த வீடு அவரது நினைவிடம் அமைந்துள்ள தாதர் சைத்யபூமிக்கு அருகில் உள்ளது. தற்போது ராஜ்குரு பங்களாவில் அம்பேத்கரின் மருமகள், அவரது பேரன்களான வஞ்சித் பகுஜன் அகாடி கட்சி தலைவரான பிரகாஷ் அம்பேத்கர், ஆனந்த் ராவ் மற்றும் பீம்ராவ் ஆகியோர் வசித்து வருகிறார்கள்.

இதுதவிர இந்த பங்களா வீட்டில் அம்பேத்கரின் தனிப்பட்ட உடைமைகளை கொண்டிருக்கும் அருங்காட்சியகம், அவரது புத்தகங்கள், அஸ்தி, கலைப்பொருட்கள் இருக்கின்றன.

தாக்குதல்

இந்தநிலையில், நேற்றுமுன்தினம் இரவு அடையாளம்தெரியாத மர்மஆசாமி ராஜ்குரு பங்களாவுக்கு வந்துள்ளார். அவர் கற்களை வீசி எறிந்து ராஜ்குரு பங்களாவின் கண்ணாடி ஜன்னல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

வீட்டு வளாகத்தில் வைக்கப்பட்டு இருக்கும் பூந்தொட்டிகளை தள்ளிவிட்டு சேதப்படுத்தினார். அங்குள்ள கண்காணிப்பு கேமராவை அடித்து நொறுக்கினார். பின்னர் அவர் அங்கியிருந்து தப்பிச் சென்று விட்டார். அம்பேத்கர் வீடு மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை உண்டாக்கி இருக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக மாட்டுங்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 2 பேர் ஈடுபட்டதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் விசாரணையில் ஒருவர் தான் ஈடுபட்டது தெரியவந்தது. மனநிலை பாதிக்கப்பட்டவரை போல காணப்படும் அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக்கு உத்தரவு

அம்பேத்கர் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து, மாநில முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, அம்பேத்கர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

அம்பேத்கர் வீடு மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. ‘ராஜ்குரு’ வீடு அவமதிக்கப்படுவதை இந்த அரசாங்கம் பொறுத்துக் கொள்ளாது.

அது அம்பேத்கரின் கொள்கைகளை பின்பற்றுபவர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சமுதாயத்தினருக்கும் புனித இடமாக விளங்குகிறது. மராட்டியர்களுக்கு அது ஒரு யாத்திரை தலம் போன்றது. எனவே தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி போலீசுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைதி காக்க வேண்டுகோள்

மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் தனது டுவிட்டர் பக்கத்தில், அம்பேத்கர் வீடு மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவிட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தின் போது அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் அகோலாவில் இருந்தார். சம்பவத்தை அடுத்து தனது ஆதரவாளர்கள் அனைவரும் அமைதி காக்கும்படியும், போராட்டங்களில் ஈடுபடாமல் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

Next Story