கோவையில் மூலிகை மைசூர்பா தயாரித்த கடைக்கு சீல் ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்துவதாக கூறி விற்றதால் நடவடிக்கை
ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்தும் என்று கூறி கோவையில் மூலிகை மைசூர்பா தயாரித்து விற்ற கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கோவை,
கோவை சின்னியம்பாளையத்தில் அடுத்த தொட்டி பாளையம் பகுதியில் ஸ்ரீ ராம் விலாஸ் நெல்லை லாலா ஸ்வீட்ஸ் என்ற பெயரில் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரித்து விற்பனை செய்யும் கடை உள்ளது. இதன் உரிமையாளர் எங்கள் கடையில் தயாரிக்கும் மூலிகை மைசூர்பாவை சாப்பிட்டால் ஒரே நாளில் கொரோனா குணமாகலாம் என்று நோட்டீஸ் அடித்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இதை அறிந்த கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி, அந்த கடையில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை, சுகாதாரத்துறை மற்றும் சித்த மருத்துவ துறைக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி டாக்டர் தமிழ்ச்செல்வன், சுகாதார பணிகள் இணை இயக்குனர் கிருஷ்ணா, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் தனம் ஆகியோர் அந்த கடைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அந்த கடையில் எந்தவித முன் அனுமதியும் இன்றி மூலிகை மைசூர்பா, கொரோனா கொல்லி மைசூர்பா என்று தயாரித்து பச்சை நிறத்தில் 50 கிராம் பாக்கெட் (2 எண்ணம்) ரூ.50-க்கும், ஒரு கிலோ ரூ-800 க்கும் விற்பனை செய்தது தெரியவந்தது. எனவே, அனுமதி இல்லாமல் கொரோனா கொல்லி என்ற பெயரில் மைசூர்பா தயாரித்தது, அதை சாப்பிட்டால் ஒரே நாளில் கொரோனா வைரஸ் நோய் குணமாகும் என்று தவறான விளம்பரம் செய்தது என்று காரணங்களுக்காக அந்த கடையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இது குறித்து கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி டாக்டர் தமிழ்செல்வன் கூறியதாவது:-
கடைக்கு சீல்
மூலிகை மைசூர்பா விற்பனை செய்த கடையில் நேரில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் மைசூர்பாவில் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, திரிபலா, மஞ்சள்தூள், முருங்கையிலை, அகத்தி இலை, கற்பூரவல்லி இலை என 19 மூலிகைகளை கொண்டு செய்யப்பட்டதாகவும், ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்தும் என விளம்பரப்படுத்தி விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனால் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த 120 கிலோ மைசூர்பா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.
எந்த துறையிலும் அனுமதி பெறாமல் விற்பனை செய்ததால் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கடைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் கடையின் உரிமமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
கடும் நடவடிக்கை
மேலும் அந்த கடையில் எவ்வித தயாரிப்பு மற்றும் விற்பனை செய்ய கூடாது என எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்கள் கொரோனா கொல்லி மைசூர்பா தயாரிக்க பயன்படுத்துவதாக கூறிய மூலப்பொருட்களின் மாதிரிகளை எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்பி உள்ளனர். கொரோனா காலத்தை பயன்படுத்தி இது போன்ற தவறான விளம்பரங்கள் செய்து உணவு சார்ந்த பொருட்களை தயாரித்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story