தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒரே நாளில் போலீஸ்காரர்கள், கர்ப்பிணி உள்பட 42 பேருக்கு கொரோனா
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் போலீஸ்காரர்கள், கர்ப்பிணி உள்பட 42 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தர்மபுரி குமாரசாமிப்பேட்டை தட்சிணாமூர்த்தி மடத்தெருவை சேர்ந்த 54 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவருடைய 33 வயதான மருமகள், 7 வயது பேத்தி, 35 வயது மகள், 8 வயது பேத்தி ஆகிய 4 பேருக்கும் பரிசோதனை செய்தபோது கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன்மூலம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதேபோல தர்மபுரி அருகே வெங்கட்டம்பட்டியை சேர்ந்த 33 வயது போலீஸ்காரர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பணிபுரிந்து வந்த 36 வயது போலீஸ்காரர், வெங்கடசமுத்திரம் பகுதியை சேர்ந்த 45 வயது சித்த மருத்துவர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தர்மபுரி ஆட்டுக்காரன் கொட்டாய் பகுதியை சேர்ந்த 22 வயதான கர்ப்பிணி, பழைய தர்மபுரியை சேர்ந்த 20 வயது பெண் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இவர்கள் உள்பட தர்மபுரி மாவட்டத்தில் முதல்முறையாக நேற்று ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை அருகே உள்ள குள்ளநாயக்கனூரை சேர்ந்த 40 வயது ஆண், மத்தூர் அருகே பெருகோபனப்பள்ளியை சேர்ந்த 53 வயது பெண், பெங்களூருவில் இருந்து வந்த ஓசூர் முல்லை நகரை சேர்ந்த 43 வயது ஆண், ஓசூர் மூக்காண்டப்பள்ளி அன்னை சத்யா நகரை சேர்ந்த 35 வயது பெண், ஓசூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த 55 வயது ஆண், ஓசூர் அரசனட்டி பாரதி நகரை சேர்ந்த 13 வயது சிறுவன், அந்த சிறுவனின் தம்பியான 8 வயது சிறுவன் ஆகியோர் உள்பட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதையடுத்து அவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 231 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story