கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க தானியங்கி கருவி எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் தொடங்கி வைத்தார்


கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க தானியங்கி கருவி எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 9 July 2020 12:30 AM GMT (Updated: 2020-07-09T05:00:15+05:30)

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்ய அமைக்கப்பட்ட தானியங்கி கருவியை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் தொடங்கி வைத்தார்.

கடலூர்,

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்ய அமைக்கப்பட்ட தானியங்கி கருவியை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் தொடங்கி வைத்தார்.

கொரோனா வைரஸ்

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் கடலூர் மாவட்டத்திலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும், அதன் பரவலை தடுத்தபாடில்லை. மேலும் கட்டுப்பாட்டு பகுதியிலும், வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு வருபவர்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதற்கிடையே மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசார் பலர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் போலீசாரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தானியங்கி தெர்மல் ஸ்கேனர்

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு மனு கொடுக்க வரும் பொதுமக்கள் மற்றும் போலீசாரின் பாதுகாப்பு கருதி, அலுவலக வாசலில் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க தானியங்கி தெர்மல் ஸ்கேனர் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி தெர்மல் ஸ்கேனர் அமைக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், நேற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தானியங்கி தெர்மல் ஸ்கேனரை தொடங்கி வைத்தார்.

கட்டுப்பாட்டு அறைக்கு செல்லும் புகைப்படம்

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் இணைய வழி பரிமாற்றம் மூலம் இந்த கருவி செயல்படுகிறது. இந்த கருவியின் முன்னால் பொதுமக்கள் நிற்கும் போது, அவர்களது உடல் வெப்ப நிலையை காட்டும். இதில் யாருக்காவது அதிக வெப்ப நிலை காட்டினால், உடனே எச்சரிக்கை ஒலி ஒலிக்கும். மேலும் அவர்களது புகைப்படம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு செல்லும். அதன் மூலம் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இக்கருவியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் வழிகாட்டுதலின்படி, காவல் தொழில்நுட்ப பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிக்குமாரால் உருவாக்கப்பட்டது என்றார்.

Next Story