குன்னூர் அருகே தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்புக்குள் புகுந்த யானைகள் இரவில் வெளியே வர வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுரை


குன்னூர் அருகே தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்புக்குள் புகுந்த யானைகள் இரவில் வெளியே வர வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுரை
x
தினத்தந்தி 8 July 2020 11:50 PM GMT (Updated: 8 July 2020 11:50 PM GMT)

குன்னூர் அருகே தேயிலை தொழிலாளர் குடியிருப்புக்குள் காட்டு யானைகள் புகுந்தது. அதை துரத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே இரவு நேரத்தில் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

குன்னூர்,

கடந்த 3 மாத காலமாக குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் பலா பழங்களுக்காக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்தகாட்டு யானைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து சேதம் ஏற்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் குன்னூர் அருகேயுள்ள கிளண்டேல் பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்புக்குள் நள்ளிரவில் 4 காட்டு யானைகள் புகுந்தன. யானைகள் புகுந்த சத்தத்தை கேட்ட பொதுமக்கள் அச்சத்துடன் வீட்டிற்குள்ளேயே இருந்தனர். நேற்றும் இந்த யானைகள் தேயிலை எஸ்டேட் பகுதிகளில் முகாமிட்டன.

விரட்டும் பணி

இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. குன்னூர் வனச்சரக அதிகாரி சசிக்குமார் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் அந்த யானைகளை அங்கிருந்து துரத்தினார்கள். அங்கிருந்து வெளியேறிய காட்டு யானைகள் அருகில் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் புகுந்தது.

தொடர்ந்து அந்த காட்டு யானைகள் அங்கேயே முகாமிட்டு உள்ளது. எனவே அருகில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பில் உள்ள பொதுமக்கள் இரவு நேரத்தில் வெளியே வர வேண்டாம் என்று வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். அத்துடன் வனத்துறையினர் அங்கு தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Next Story