கொரோனா பரவலை தடுக்க கிராமப்புறங்களில் இருந்து விழுப்புரம் நகரத்திற்குள் வர பொதுமக்களுக்கு தடை
கொரோனா பரவலை தடுக்க கிராமப்புறங்களில் இருந்து விழுப்புரம் நகரத்திற்குள் வர பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்,
கொரோனா பரவலை தடுக்க கிராமப்புறங்களில் இருந்து விழுப்புரம் நகரத்திற்குள் வர பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ்
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலும் இந்நோய் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.
மாவட்டத்தில் இதுவரை 1,300-க்கும் மேற்பட்டோர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 18 பேர் இறந்துள்ளனர். 561 பேர், மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக மாவட்ட நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ளவர்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
விழுப்புரம் நகருக்குள் வர தடை
இந்த சூழலில் மக்கள் சமூக இடைவெளியை சரியாக கடைபிடிக்காததால் கொரோனா நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினந்தோறும் உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக விழுப்புரம் நகரில் 100-க்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் விழுப்புரம் பகுதி மக்களிடையே இன்னும் கொரோனா வைரசின் தாக்கம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் அத்தியாவசிய பொருட்களை வாங்க வருகிறோம் என்ற பெயரில் தினமும் விழுப்புரம் நகரில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இந்நிலையில் மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் வகையிலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையிலும் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி விழுப்புரத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமப்புறங்களை சேர்ந்த பொதுமக்கள் விழுப்புரம் நகரத்திற்குள் வர காவல்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்புகளை விழுப்புரம் நகரின் பல இடங்களிலும் மற்றும் கிராமப்புறங்களிலும் விளம்பர பதாகைகளாக போலீசார் வைத்துள்ளனர்.
முக்கிய சாலைகள் மூடல்
மேலும் விழுப்புரம் நகரத்தை சுற்றியுள்ள மாம்பழப்பட்டு சாலை, ஜானகிபுரம், எல்லீஸ்சத்திரம் சாலை, விராட்டிக்குப்பம் சாலை, முத்தாம்பாளையம், கோலியனூர் உள்ளிட்ட நகரத்தை சுற்றியுள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு அங்கு போலீசார் தடுப்புக்கட்டைகள் அமைத்து கிராமப்புற மக்களை, விழுப்புரம் நகருக்குள் செல்ல விடாமல் தடுத்து திருப்பி அனுப்பி வருகின்றனர். அதேசமயத்தில் அரசு ஊழியர்களையும், மருத்துவ சிகிச்சை தொடர்பாக வரும் பொதுமக்களையும் மட்டுமே நகருக்குள் அனுமதித்து வருகின்றனர். அதுபோல் காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக்கொண்டு வரும் வாகனங்களும் நகருக்குள் வர அனுமதிக்கப்படுகிறது. மற்ற அனைவருக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், விழுப்புரம் நகரத்திற்குள் கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் காரணமாக கிராமப்புறங்களிலிருந்து நகர் புறத்திற்கு பொதுமக்கள் வர அனுமதி இல்லை. அதனையும் மீறி வருபவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். அதோடு அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். ஏற்கனவே வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறிகள், மளிகை பொருட்கள் கிராமப்புறங்களுக்கு நடமாடும் வாகனங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் ஒரு வாரத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். அதேபோல் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும், முக கவசம் இன்றி யாரும் வெளியில் வரக்கூடாது என்றனர்.
Related Tags :
Next Story