ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் டாக்டர்கள், நர்சுகள் உள்பட 168 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,089 ஆக உயர்வு
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் டாக்டர்கள், நர்சுகள் உள்பட 168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.இதனால் பாதிப்பு எண்ணிக்கை 4,089 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர்,
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் டாக்டர்கள், நர்சுகள் உள்பட 168 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதன் மூலம் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,089 ஆக உயர்ந்தது.
வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள வளாகத்தில் தங்கி பணிபுரியும் 2 டாக்டர்களுக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த டாக்டர்கள் மற்றும் அவர்களுடன் பணிபுரிந்த நர்சுகள், ஊழியர்களுக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டன.
இந்த நிலையில் நேற்று வந்த பரிசோதனை முடிவில் 2 டாக்டர்கள், 3 நர்சுகள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. அதையடுத்து அவர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
வேலூர் கஸ்பாவை சேர்ந்த 7 வயது ஆண் குழந்தை, 9 வயது பெண் குழந்தை, கல்லாப்பாடியில் 1 வயது பெண் குழந்தை உள்பட 10 பேர், வேலூர் சைதாப்பேட்டை விடுதியில் தங்கியுள்ள 30 வயது பெண், 38 வயது ஆண், டெல்லியை சேர்ந்த 66 வயது மூதாட்டி மற்றும் பாகாயத்தை சேர்ந்த 78 வயது முதியவர் உள்பட மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 100 பேரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,298 ஆக உயர்ந்துள்ளது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் அரக்கோணம், ஆற்காடு, காவேரிப்பாக்கம், நெமிலி, சோளிங்கர், திமிரி, வாலாஜா, ராணிப்பேட்டை பகுதிகளை சேர்ந்த மொத்தம் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,430 ஆக உயர்ந்துள்ளது. இதில் 713 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பத்தூர்
இதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று அனைத்து பகுதிகளிலும் பரவலாக பரவ ஆரம்பித்துள்ளது. நேற்று மட்டும் ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரே நாளில் 34 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 361 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று 17 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
Related Tags :
Next Story