திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் யாரும் இறக்கவில்லை: கலெக்டர் சிவன்அருள் பேட்டி


திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் யாரும் இறக்கவில்லை: கலெக்டர் சிவன்அருள் பேட்டி
x
தினத்தந்தி 9 July 2020 6:26 AM IST (Updated: 9 July 2020 6:26 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் யாரும் இறக்கவில்லை என கலெக்டர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.

வாணியம்பாடி, 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று தடுப்பு பணிகளை கலெக்டர் சிவன்அருள் நேற்று முன்தினமும், நேற்றும் தொடர்ந்து 2 நாளாக நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வாணியம்பாடி நியூ டவுனில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய், மருத்துவம், நகராட்சி நிர்வாகம் ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார். அதைத்தொடர்ந்து வாணியம்பாடியில் உள்ள அனைத்து வணிகர் சங்கங்கள், மருத்துவ சங்க நிர்வாகிகள், ஓட்டல் சங்க நிர்வாகிகள் ஆகியோருடன் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் குறித்து கலெக்டர் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை மாவட்டம் முழுவதும் 20 ஆயிரத்து 526 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 327 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, அதில் 138 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மற்ற 189 பேர் திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாணியம்பாடி நகராட்சி பகுதியில் அதிக தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அதில் பெரியபேட்டை உள்பட 12 வார்டுகளில் முழு கவனம் செலுத்தி நாள் ஒன்றுக்கு 6 மருத்துவக் குழுக்கள் 6 முறை மருத்துவச் சிகிச்சை முகாம், கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் உள்பட கொரோனா தொற்று தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் யாரும் இறக்கவில்லை. இதுகுறித்து யாரேனும் தவறான தகவல்களை பரப்பி வந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

திருப்பத்தூர், மாதனூர் ஒன்றிய பகுதிகளில் கொரோனா தொற்று பரவி உள்ளது. அதிலும் மாதனூர் ஒன்றியம் மின்னூர் பகுதியில் அதிகமாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கும், தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மக்கள், வியாபாரிகள் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்று முழு கட்டுப்பாட்டுக்குள் வரும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி, வட்டாட்சியர் சிவப்பிரகாசம், நகராட்சி பொறுப்பு ஆணையாளர் பாபு, அரசு மருத்துவ அலுவலர்கள் டாக்டர் செல்வகுமார், பசுபதி, சத்தியராஜ் நேசன், நேதாஜி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், சுகாதார ஆய்வாளர்கள் சீனிவாசன், அலி மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story