வாணாபுரத்தில் பரபரப்பு: கொரோனா பரிசோதனைக்கு செல்ல மறுத்து அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்


வாணாபுரத்தில் பரபரப்பு: கொரோனா பரிசோதனைக்கு செல்ல மறுத்து அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 9 July 2020 1:20 AM GMT (Updated: 9 July 2020 1:20 AM GMT)

வாணாபுரத்தில் கொரோனா பரிசோதனைக்கு செல்ல மறுத்து அதிகாரிகள், மருத்துவர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வாணாபுரம், 

வாணாபுரம் அருகே உள்ள மெய்யூரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வெளிமாவட்டம், பிற மாநிலங்களில் வேலை செய்து வந்தனர். தற்போது அவர்கள் சொந்த ஊருக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் அங்கு 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், அப்பகுதியை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும் அவர்கள் வசித்த பகுதிகளில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக நேற்று காலை மருத்துவ குழுவினர் அங்கு முகாமிட்டு பரிசோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் நாங்கள் பரிசோதனை செய்ய வரமாட்டோம் என்று அதிகாரிகளிடமும், மருத்துவர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாணாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு செல்ல மறுத்துவிட்டனர். மேலும் அவர்கள் அதிகாரிகளிடம், எங்களை மட்டும் பரிசோதனை செய்கிறீர்கள், மற்றொரு தரப்பை சேர்ந்தவர்களுக்கு ஏன் பரிசோதிக்க மறுக்கிறீர்கள் என்று கேட்டு அதிகாரிகள் இடத்தில் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.


Next Story