ஜவ்வாதுமலை வட்டார விவசாயிகளுக்கு இ-பாஸ் வசதி - கலெக்டர் நடவடிக்கை


ஜவ்வாதுமலை வட்டார விவசாயிகளுக்கு இ-பாஸ் வசதி - கலெக்டர் நடவடிக்கை
x
தினத்தந்தி 9 July 2020 1:26 AM GMT (Updated: 2020-07-09T06:56:18+05:30)

விளை பொருட்களை விற்பனை செய்ய ஜவ்வாதுமலை வட்டார விவசாயிகளுக்கு இ-பாஸ் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ஜமுனாமரத்தூர்,

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் மலைவாழ் விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பலாப்பழம், சீதாபழம், மா, நெல்லி உள்ளிட்ட பொருட்களை விளைவித்து வருகின்றனர். ஊரடங்கு உள்ளதால் ஜவ்வாதுமலை வட்டாரத்தில் விளைவிக்க கூடிய பொருட்களை அடிவார பகுதிகளுக்கு விவசாயிகள் கொண்டு சென்று விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும் விளை பொருட்கள் சேலம், கோவை, வேலூர் போன்ற மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வார்கள்.

தற்போது அவர்களின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல், வாடிக்கையாளர்கள் கேட்கும் விலைக்கு விற்பனை செய்யும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கந்தசாமிக்கு புகார்கள் சென்றது.

இதனையடுத்து கலெக்டர் ஜவ்வாதுமலை வட்டாரத்தில் விளைவிக்கக்கூடிய பலாப்பழம், சீதாபழம், மா, நெல்லி உள்ளிட்ட பொருட்களை விவசாயிகளே நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்ய ஏதுவாக வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் இ-பாஸ் வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.

விவசாயிகள் இ-பாஸ் பெறுவதற்கு ஆதார் எண், செல்போன் எண் மற்றும் வாகன பதிவு எண்ணை வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் கொடுத்து, இ-பாஸ் பெறலாம். பின்னர் விளைவித்த பொருட்களை கொண்டு சென்று விற்பனை செய்து கொள்ளலாம்.

எனவே மலைவாழ் விவசாயிகள் இ-பாஸ் பெற ஜவ்வாதுமலை வட்டாரத்தை சேர்ந்த தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர், தோட்டக்கலை அலுவலர், வேளாண் அலுவலர், வேளாண் உதவி அலுவலர் போன்ற அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் ஜவ்வாதுமலை வட்டாரங்களில் பல்வேறு இடங்களில் விவசாயிகளுக்கு இதுகுறித்த அறிவிப்பு பதாகைகளை வைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Next Story