திருக்காட்டுப்பள்ளியில் குறுவை நடவு பணி மும்முரம்


திருக்காட்டுப்பள்ளியில் குறுவை நடவு பணி மும்முரம்
x
தினத்தந்தி 9 July 2020 3:21 AM GMT (Updated: 9 July 2020 3:21 AM GMT)

திருக்காட்டுப்பள்ளி பகுதியில் குறுவை நடவு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

திருக்காட்டுப்பள்ளி, 

திருக்காட்டுப்பள்ளி பகுதியில் கால்வாய் பாசனத்தை நம்பி உள்ள விவசாயிகள் சிறு வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்ட உடன் குறுவை சாகுபடிக்கான ஆயத்த பணிகளை தொடங்கி விட்டனர். இந்த ஆண்டு குறுகியகால நெல் ரகங்களை விவசாயிகள் தேர்வு செய்து உள்ளனர்.

இதையடுத்து திருக்காட்டுப்பள்ளி பகுதியில் குறுவை நடவு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. வருகிற 15-ந் தேதிக்குள் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் அனைத்து கிராமங்களிலும் குறுவை சாகுபடி பணிகள் நிறைவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மேட்டூர் அணையில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருவது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

மேட்டூர் அணை திறக்கப்பட்டபோது 101 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது 84 அடியாக குறைந்துவிட்டது. இதனால் கிளை வாய்க்கால்களில் தண்ணீர் பெற்று சாகுபடி பணிகளை மேற்கொண்டு வரும் விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்குமா? என்ற சந்தேகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூலை இறுதியில் கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை கொட்டியது. கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு மேட்டூர் அணை 4 முறை முழு கொள்ளளவை எட்டியது. இந்த ஆண்டு தண்ணீர் திறக்கப்பட்டதில் இருந்து இதுவரை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து திருப்திகரமாக இல்லை. காவிரி நீரில் தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடக மாநிலத்தில் இருந்து திறந்து விட்டால் குறுவை சாகுபடியை சிரமமின்றி மேற்கொள்ள முடியும் என்று விவசாயிகள் கருதுகின்றனர்.

Next Story