சசிகலா விடுதலையானதும் அரசியலில் மாற்றங்கள் ஏற்படும் அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் பேட்டி


சசிகலா விடுதலையானதும் அரசியலில் மாற்றங்கள் ஏற்படும் அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் பேட்டி
x
தினத்தந்தி 9 July 2020 3:41 AM GMT (Updated: 2020-07-09T09:11:36+05:30)

சசிகலா விடுதலையானதும் அரசியலில் மாற்றங்கள் ஏற்படும் என அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி கூறினார்.

மன்னார்குடி, 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அ.ம.மு.க. ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. சீனிவாசன், மாநில நிர்வாகிகள் மலர்வேந்தன், சத்தியமூர்த்தி, மாவட்ட தொழிற்சங்க நிர்வாகி ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகர செயலாளர் ஆனந்தராஜ் வரவேற்றார்.

கூட்டத்தில் அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ரெங்கசாமி கலந்து கொண்டு பேசினார். இதில் ஒன்றிய செயலாளர்கள் அசோகன், ரெங்கராஜ், சங்கர், மாவட்ட துணைச்செயலாளர் சரவணசெல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தை தொடர்ந்து ரெங்கசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உண்ணாவிரதம்

மன்னார்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பைங்காநாடு, காரிகோட்டை ஆகிய ஊராட்சிகளில் அ.ம.மு.கவை சேர்ந்த ஆதிதிராவிடர் பிரிவை சேர்ந்தவர்கள் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளனர். இந்த 2 ஊராட்சிகளிலும் ஊராட்சி மன்ற தலைவரை புறக்கணித்து பழிவாங்கும் நோக்கத்துடன் ஒன்றியக்குழு உறுப்பினர் மூலம் பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை புறந்தள்ளி இதுபோன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் அ.தி.மு.க.வை கண்டிக்கிறோம். இதை கண்டித்து 2 ஊராட்சி மன்ற தலைவர்களும் நாளை(வெள்ளிக்கிழமை) ஒன்றிய அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க உள்ளனர்.

தி.மு.க., அ.தி.மு.க. கூட்டு

தீர்வு கிடைக்காத பட்சத்தில் பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம். ஆளும் கட்சிக்கு தெம்பு இருந்தால் தி.மு.க.வை சேர்ந்தவர் ஊராட்சி தலைவராக இருக்கும் ஊராட்சிகளில் இதுபோன்ற நடவடிக்கைகளை செய்து பார்க்கட்டும். தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டு வைத்துக்கொண்டு செயல்படுகின்றனர். அதனால்தான் அ.தி.மு.க.வின் ஜனநாயக விரோத செயல்களை தடுக்காமல் தி.மு.க. வேடிக்கை பார்க்கிறது. ஒரு சிலர் அ.ம.மு.க.வை விட்டு சென்றதால் கட்சிக்கு எந்த விதத்திலும் பாதிப்பு இல்லை. அ.ம.மு.க. தற்போதும் மிக பலமான கட்சியாக செயல்பட்டு வருகிறது. வருங்கால தேர்தல்களில் அ.ம.மு.க. தன்னுடைய பலத்தை நிரூபிக்கும்.

மாற்றங்கள் ஏற்படும்

சசிகலா விடுதலை குறித்து எங்களுடைய வக்கீல் தெளிவாக விளக்கி இருக்கிறார். இதில் யூகங்களுக்கு இடமில்லை. சட்ட நடைமுறைப்படி சிறையில் இருந்து அவர் விரைவில் விடுதலையாகி வெளியே வருவார். அவர் விடுதலையாகி வெளிவந்த பிறகு அரசியலில் நிச்சயம் மாற்றம் ஏற்படும். அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவி குறித்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.

அ.தி.மு.க. சட்ட விதிப்படி பொதுச்செயலாளரை நீக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை. சசிகலா விடுதலையாகி வரும்போது அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காணாமல் போய்விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story