தினமும் 1,150 பேருக்கு பரிசோதனை: தவறான கொரோனா முடிவு அறிக்கை வெளியிட்ட நிறுவனம் மீது நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை


தினமும் 1,150 பேருக்கு பரிசோதனை: தவறான கொரோனா முடிவு அறிக்கை வெளியிட்ட நிறுவனம் மீது நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 9 July 2020 10:50 AM IST (Updated: 9 July 2020 10:50 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் தினமும் 1,150 பேருக்கு பரிசோதனை செய்யப்படுவதாகவும், தவறான கொரோனா முடிவு அறிக்கை வெளியிட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி, 

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவர் கல்லூரியில் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் கலெக்டர் எஸ்.சிவராசு தலைமையில் நடந்தது. இதில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர்கள் நிஷா (சட்டம்-ஒழுங்கு), வேதரத்தினம் (குற்றம் மற்றும் போக்குவரத்து), மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் சிவராசு பேசியதாவது:-

திருச்சி மாவட்டத்திற்கு சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்தும் இ-பாஸ் மூலம் வருகை புரிந்தவர்கள் மற்றும் இ-பாஸ் இல்லாமல் வருகை புரிந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு நோய் உள்ளதா? என கண்டறிந்து தனிமைப்படுத்தவும் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள குடியிருப்பில் உள்ள அனைத்து நபர்களின் உடல்நிலையை பரிசோதனை செய்யவும் 65 வார்டுகளிலும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தினமும் 1,150 பேருக்கு பரிசோதனை

வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலமும், உள்நாட்டு விமானங்கள் மூலம் வரும் பயணிகளையும், ரெயில் மூலம் வரும் பயணிகளையும், வெளிமாநிலங்கள், மாநிலங்களுக்கு இடையில் சாலை வழியாக வருபவர்கள் மற்றும் இதர வழிகளில் வருபவர்களையும் அடையாளம் கண்டு அவர்களை 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்த வேண்டும்.

கொரோனா வைரஸ் நோய் பரவுதலை தடுப்பதற்கு பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். வெளியில் வரும்போது முககவசம் அணிந்து வர வேண்டும். பொது இடங்களில் மற்றும் கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இந்த மூன்று வழிமுறைகளையும் கடைப்பிடித்தால் முற்றிலுமாக கொரோனா வைரஸ் நோய் பரவுதலை தடுக்கலாம். நாள்தோறும் 1,150 நபர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் பரிசோதனை செய்யப்படுகிறது.

நிறுவனம் மீது நடவடிக்கை

கபசுரக்குடிநீர், ஆர்சானிக் என்ற 30 மாத்திரைகள் ஆகியவற்றை உட்கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்ள வேண்டும். மேலும், அரசு அறிவித்த ஜிங்க் மற்றும் வைட்டமின் மாத்திரைகளை உட்கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்ள வேண்டும். திருச்சி மாவட்டத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் மட்டும் கொரோனா வைரஸ் நோய் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த பரிசோதனை நிறுவனத்தில் தவறாக அறிக்கை கொடுக்கப்பட்டதாக பல்வேறு புகார்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வந்துள்ளது. அதன் அடிப்படையில் அந்தநிறுவனத்திற்கு அறிவிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றது. அறிக்கை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

வீடு, வீடாக கண்காணிப்பு

மாநகராட்சிப் பகுதிகளான ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை மற்றும் கோ-அபிஷேகபுரம் ஆகிய 4 கோட்டங்களில் உள்ள 65 வார்டுகளிலும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக மருத்துவ அலுவலர் தலைமையில் சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர், உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர், பில் கலெக்டர், சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் களப்பணியாளர்கள் ஆகியோர் கொண்ட 65 குழுக்கள் அமைக்கப்பட்டு அந்தந்தப் பகுதியில் வீடு, வீடாகச்சென்று பரிசோதனை மேற்கொண்டு பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ளனவா? என கண்காணிக்க உள்ளனர்.

இவ்வாறு கலெக்டர் சிவராசு தெரிவித்தார்.

Next Story