கொரோனா பரவி வரும் நிலையில் மருத்துவ உபகரணங்களை வாங்க ரூ.288 கோடி மந்திரிசபை கூட்டத்தில் முடிவு
கொரோனா பரவி வரும் நிலையில் சுகாதாரத்துறையில் மருத்துவ உபகரணங்களை வாங்க ரூ.288 கோடி நிதி ஒதுக்க மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கொரோனா பரவி வரும் நிலையில் சுகாதாரத்துறையில் மருத்துவ உபகரணங்களை வாங்க ரூ.288 கோடி நிதி ஒதுக்க மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மந்திரிசபை கூட்டம்
கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை மந்திரி மாதுசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் சுமார் 600 டாக்டர்கள் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களின் சேவை காலத்திற்கு மதிப்பெண் வழங்கி பணிநிரந்தரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு 6 மாத காலத்திற்கு 2.50 மதிப்பெண்கள் வழங்கப்படும். அதிகபட்சமாக ஒருவருக்கு 30 மதிப்பெண்கள் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடனாக ரூ.2,500 கோடி
நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள மின் வினியோக நிறுவனங்களுக்கு வட்டியில்லா கடனாக ரூ.2,500 கோடி வழங்கப்படும். விஜயாப்புராவில் ரூ.220 கோடி செலவில் விமான நிலையம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதில் முதல் ஆண்டில் ரூ.95 கோடி ஒதுக்கப்படும். மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் பிராண வாயு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த ரூ.207 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. பிற அவசர மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்ய ரூ.81 கோடி வழங்கப்படுகிறது. மொத்தம் ரூ.288 கோடியில் மருத்துவ உபகரணங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் லட்சுமி நரசய்யா வருகிற 13-ந் தேதி ஓய்வு பெறுகிறார். அவரது இடத்திற்கு வேறு ஒருவரை நியமிக்க முதல்-மந்திரிக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. வேளாண்மை சந்தைகளில் வசூலிக்கப்படும் வரி 1.50 சதவீதத்தில் இருந்து ஒரு சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா நெருக்கடி
லோக் அயுக்தா சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதல்கட்ட விசாரணையை 90 நாட்களில் நிறைவு செய்ய வேண்டும். 6 மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும். கொரோனா வைரஸ் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அவசரகால நிதியை பயன்படுத்தும் அளவு தற்போது ரூ.80 கோடியாக உள்ளது. பொதுமக்களுக்கு உதவி செய்ய இதை ரூ.500 கோடியாக அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அவசர சட்டம் பிறப்பிக்க உள்ளோம். முதலீட்டாளர்களை ஈர்க்க போஸ்டர்ன் கன்சல்டிங் என்ற தனியார் நிறுவனத்தை நியமிக்க முடிவு செய்துள்ளோம். அந்த நிறுவனத்திற்கு மாதம் ரூ.1 கோடி வீதம் ரூ.12 கோடி வழங்கப்படும். அந்த நிறுவனம் உலக அளவில் முதலீட்டாளர்களை சந்தித்து கர்நாடகத்தில் முதலீடுகளை தொடங்க உதவும்.
தொழில்நுட்ப நிறுவனம்
ராய்ச்சூரில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.ஐ.டி.) தொடங்க ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. இதற்காக மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. அங்கு பணிகளை மேற்கொள்ள ரூ.44 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. சிவமொக்கா மருத்துவ அறிவியல் கல்லூரியில் மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்ய ரூ.12.8 கோடி ஒதுக்கப்படுகிறது.
இவ்வாறு மாதுசாமி கூறினார்.
Related Tags :
Next Story