போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் ஜாமீன் கேட்டு மனு விசாரணை 13-ந்தேதிக்கு தள்ளிவைப்பு


போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் ஜாமீன் கேட்டு மனு விசாரணை 13-ந்தேதிக்கு தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 10 July 2020 4:00 AM IST (Updated: 9 July 2020 11:50 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் ஜாமீன் கேட்டு தூத்துக்குடி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

தூத்துக்குடி, 

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் ஜாமீன் கேட்டு தூத்துக்குடி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை 13-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

தந்தை, மகன் சாவு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 10 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் 2 கொலை வழக்குகளுக்கும் தனித்தனியாக ஜாமீன் கோரி தூத்துக்குடி மாவட்ட முதன்மை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை மாவட்ட முதன்மை நீதிபதி லோகேசுவரன் முன்னிலையில் நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்தது.

ஒத்திவைப்பு

சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் குற்ற வழக்கு தொடர்பு துறை துணை இயக்குனர் சுப்புராஜ் ஆஜராகி வாதாடினார். மனுதாரர் தரப்பில் மதுரையை சேர்ந்த வக்கீல் சரவணன் ஆஜரானார். சி.பி.சி.ஐ.டி. தரப்பில், சாத்தான்குளம் தந்தை, மகன் இறந்த வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அதனால் ஜாமீன் தரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதைத்தொடர்ந்து மனுதாரர் தரப்பினர் கால அவகாசம் கோரினர்.

இதையடுத்து நீதிபதி லோகேசுவரன் இந்த மனு மீதான விசாரணையை வருகிற 13-ந் தேதிக்கு (திங்கட்கிழமை) தள்ளிவைத்தார்.

Next Story