ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை நடக்காததால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு
ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை நடக்காததால்பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு,
தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய மாட்டுச்சந்தையாக ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை உள்ளது. இங்கு வாரந்தோறும் புதன் கிழமை கன்றுக்குட்டிகள் விற்பனை மாட்டுச்சந்தையும், வியாழக்கிழமை கறவை மாடுகள் விற்பனை சந்தையும் நடப்பது வழக்கம். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் இந்த சந்தை இயங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து அன்றில் இருந்து இன்றுவரை சந்தை கூடவில்லை. இதன் காரணமாக மாடுகள் வளர்க்கும் விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனை செய்ய முடியாமலும், வியாபாரிகள் மாடுகளை வாங்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டு உள்ளது. இதனால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சந்தை மேலாளர் ராஜேந்திரன் கூறியதாவது:-
ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு ராஜபாளையம், மதுரை, கம்பம், தேனி, சேலம், கோவை, கரூர், நாமக்கல், திருப்பூர் மற்றும் ஈரோடு போன்ற பகுதிகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இந்த மாடுகளை சென்னை, திருவண்ணாமலை, ஆத்தூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், மராட்டியம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கான, கோவா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து தங்களுக்கு பிடித்தமான மாடுகளை விவசாயிகளிடம் நேரடியாக விலை பேசி வாங்கிச்செல்வார்கள்.
வாரந்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடக்கும் சந்தை மூலம் சுமார் ரூ.3 கோடி முதல் ரூ.3½ கோடி வரை வர்த்தகம் நடைபெறும். ஆனால் கடந்த மார்ச் மாதம் 11-ந்தேதிக்கு பின்னர் சந்தை கூடவில்லை. இதன் காரணமாக பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story