சத்தி புலிகள் காப்பகத்தில் அனுமதியின்றி மரங்களை வெட்டி சாலை அமைப்பு: பவானிசாகர் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு
சத்தி புலிகள் காப்பகத்தில் அனுமதியின்றி மரங்களை வெட்டி சாலை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதை பவானிசாகர் எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தாளவாடி,
தமிழகத்தின் 4-வது புலிகள் காப்பகமாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் 2013-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. 1455 சதுர கி.மீ பரப்பளவு கொண்டுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம் மற்றும் ஆசனூர் வனக்கோட்டங்கள் உள்ளன. சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், விளாமுண்டி, டிஎன்.பாளையம், தலமலை, கடம்பூர் என 6 வனச்சரகங்களும், ஆசனூர் வனக்கோட்டத்தில் ஆசனூர், கேர்மாளம், தாளவாடி, ஜீரஹள்ளி ஆகிய 4 வனச்சரகங்களும் என மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன.
ஆசனூர் வனக்கோட்டத்தில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மற்றும் இந்தாண்டு ஜனவரி மாதத்தில் அரசிடம் முன்அனுமதி பெறாமல் வனச்சாலைகள் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் நூற்றுக்கணக்கான விலை உயர்ந்த மரங்கள் அனுமதியின்றி வெட்டி அழிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதனை விசாரிக்க சென்னையில் இருந்து 8 பேர் கொண்ட வன குற்றத்தடுப்பு தனிப்படையினர் கடந்த வாரம் புகார் கூறப்பட்ட ஆசனூர் வனத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தனர்.
தாக்கல் செய்த விசாரணை அறிக்கையின்படி வன உயிரின குற்றத்தடுப்பு தமிழக கூடுதல் முதன்மை தலைமை வனபாதுகாவலர் லிமாடோசி ஆசனூர் வனப்பகுதியில் முகாமிட்டு ஆய்வு செய்தார். அடர்ந்த வனப்பகுதியில் தேக்குமர டிப்போ முதல் உளிக்கரைவரை 4 கி.மீ தூரமும் மணிக்கல்ரோடு முதல் அழுகரைக்குட்டை பகுதியில் 4 கி.மீ தூரமும் கோடிப்பள்ளம் முதல் கேர்மாளம் சூட்டிங் ஸ்பாட் வனத்தில் 12 கி.மீ தூரமும் மண் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சாலை அமைப்பதற்கு இடையூறாக இருந்த நூற்றுக்கணக்கான விலை உயர்ந்த மரங்கள் அழிக்கப்பட்டதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது சம்பந்தமான குற்ற அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த புகாரை தொடர்ந்து, புலிகள் காப்பகத்தின் மேலாண்மை குழு உறுப்பினரான பவானிசாகர் எம்.எல்.ஏ எஸ்.ஈஸ்வரன் புகார் தெரிவிக்கப்பட்ட வனச்சாலை பகுதிகளை நேரில் சென்று ஆய்வுசெய்து மரங்கள் வெட்டப்பட்டதை உறுதி செய்துள்ளார். இதையடுத்து உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை மீறியும் மற்றும் புலிகள் காப்பகத்தின் நெறிமுறை பின்பற்றாமல் நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டது உறுதியானதால் வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பவானிசாகர் எம்.எல்.ஏ. ஈஸ்வரன் தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார்.
Related Tags :
Next Story