குமரியில் வினோத முறையில் பிறந்த நாள் கொண்டாட்டம்: நண்பரை கம்பத்தில் கட்டி வைத்து சாணத்தில் குளிப்பாட்டி கேக் வெட்டினர்


குமரியில் வினோத முறையில் பிறந்த நாள் கொண்டாட்டம்: நண்பரை கம்பத்தில் கட்டி வைத்து சாணத்தில் குளிப்பாட்டி கேக் வெட்டினர்
x
தினத்தந்தி 10 July 2020 4:00 AM IST (Updated: 10 July 2020 1:38 AM IST)
t-max-icont-min-icon

ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.

அழகியமண்டபம், 

குமரியில், நண்பரை கம்பத்தில் கட்டி வைத்து சாணத்தில் குளிப்பாட்டி, கேக் வெட்டி வினோத முறையில் பிறந்த நாள் கொண்டாட்டம் நடத்திய வாலிபர்கள் குறித்த வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிறந்த நாள்

ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். பொதுவாக வீடுகளில் உற்றார், உறவினர், குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடுவதுடன், கோவிலுக்கு சென்று சாமியை தரிசனம் செய்வதுதான் வழக்கம்.

கடந்த சில நாட்களாக ஒருசில வாலிபர்கள் தங்களது நண்பர்களுடன் பட்டா கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு கேக் வெட்டி கொண்டாடுவதும், அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ விடுவதும் வாடிக்கையாகி விட்டது. அப்படி ஆயுதங்களை கொண்டு கேக் வெட்டி கொண்டாடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த சம்பவங்களும் ஆங்காங்கே நடந்துள்ளன.

வினோத கொண்டாட்டம்

இதற்கிடையே குமரி மாவட்டத்தில் கல்லூரி மாணவர் ஒருவரது பிறந்த நாளை அவருடைய நண்பர்கள் கொண்டாடிய விதம் வினோதமாக இருந்தது. அதன் விவரம் வருமாறு:-

குமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ளது பரம்பு. இந்த பகுதியைச் சேர்ந்தவர் பெபிஸ் (வயது 21). இவர், நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். பெபிசுக்கு நேற்று முன்தினம் 21-வது வயது பிறந்தது.

இதனை அறிந்த அவருடைய நண்பர்கள், பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாட நினைத்தனர். அதனை எப்படி கொண்டாடுவது என ஆளுக்கொரு யோசனை. முடிவில் அவர்கள் அனைவரது ஆலோசனைக்கு பிறகு பிறந்த நாள் கொண்டாட்டம் வினோதமாக அரங்கேறியது.

மின்கம்பத்தில் கட்டினர்

அதாவது, பெபிசை, அவருடைய நண்பர்கள் சட்டையை கழற்றி விட்டு மின்கம்பத்தில் கட்டி வைத்தனர். அப்போது இரு கைகளையும் ஒன்றாக சேர்த்து பின்பக்கமாக கட்டி வைத்து இருந்தனர்.

முதலில் நண்பர்கள் ஒவ்வொருவராக முட்டைகளை பெபிஸ் மீது உடைக்கின்றனர். அப்போது உடலில் அடிக்காமல் முட்டையை மட்டும் உடையுங்கள் என்று பெபிஸ் சிரித்துக் கொண்டே கூறினார்.

சாணம் குளியல்

முட்டையை உடைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நண்பர்கள் உற்சாக மிகுதியால் குங்குமத்தை கரைத்து குளியல் நடத்தினர். தக்காளி பழத்தை அவர் மீது தேய்த்தனர். தொடர்ந்து தயிர் பாக்கெட்டுகளை உடைத்து தலையில் இருந்து உடல் முழுவதும் தயிரால் அபிஷேகம் செய்தனர்.

உற்சாகத்தின் உச்சத்துக்கு சென்ற நண்பர் ஒருவர், சாணத்தை கரைத்து ஒரு வாளியில் எடுத்து வந்து பெபிஸ் தலையில் ஊற்றினார். பெபிசும் அதனை ஏற்றுக் கொண்டது போல் சாணத்தால் குளியலுக்கு தலையை கொடுத்தார். பின்னர் ஷாம்பு குளியல் நடத்தினர்.

கேக் வெட்டினர்

இந்த குளியல் கொண்டாட்டம் முடிந்த பிறகு பெபிஸ் புத்தாடை அணிந்தார். அதன்பிறகு கேக் வெட்டி நண்பர்களுக்கு ஊட்டியதுடன் அவரும் சாப்பிட்டார். இப்படித்தான் இந்த வினோத பிறந்த நாள் கொண்டாட்டம் அரங்கேறி முடிந்தது.

இதனை வீடியோ எடுத்த நண்பர்கள் அதனை வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவ விட்டனர். கொரோனா ஊரடங்கு நேரத்தில் இப்படி நள்ளிரவில் அரங்கேறிய இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story