புதுச்சேரி கடற்கரை இன்று முதல் திறப்பு நடைபயிற்சிக்கு மட்டும் அனுமதி
புதுச்சேரி கடற்கரை இன்று முதல் திறக்கப்பட்டு பொதுமக்கள் நடைபயிற்சிக்கு மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி கடற்கரை இன்று முதல் திறக்கப்பட்டு பொதுமக்கள் நடைபயிற்சிக்கு மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார்.
கடற்கரை மூடல்
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக கடந்த மார்ச் மாதம் கடற்கரை மூடப்பட்டது. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டவுடன் மீண்டும் கடற்கரை திறக்கப்பட்டது.
இந்தநிலையில் மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்தது. அப்போது 6-ம் கட்டமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் மீண்டும் கடற்கரை சாலை கடந்த 3-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் கடற்கரையில் நடைபயிற்சி செல்வோர் மற்றும் பல்வேறு கட்சியினர் கடற்கரை சாலையை நடைபயிற்சிக்கு அனுமதிக்கும் வகையில் திறந்துவிடுமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இன்று முதல் திறப்பு
இந்தநிலையில் கடற்கரை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் பொதுமக்கள் நடைபயிற்சி செல்வதற்கு மட்டும் அனுமதிக்கும் வகையில் திறக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி கடற்கரை சாலை காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும். இங்கு நடைபயிற்சிக்கு வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணியவேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். எச்சில் துப்பக்கூடாது. பொது நிகழ்ச்சிகளோ, கூட்டங்களோ நடத்த அனுமதி இல்லை. அவற்றை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story