புதுவை அரசு தயாரித்து அனுப்பிய பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் முக்கிய அறிவிப்புகள் குறித்து அமைச்சரவை இன்று ஆலோசனை
புதுவை அரசு தயாரித்து அனுப்பிய பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
புதுச்சேரி,
புதுவை சட்ட சபையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.
புதுவை பட்ஜெட்
கடந்த என்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்து பல்வேறு காரணங்களை காட்டி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதன்பின் ஜூன், ஜூலை மாதங்களில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
அதுபோல் இந்த ஆண்டும் கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி இடைக்கால பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டது. அதாவது ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கான அரசின் செலவினத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டது. அதற்கான அனுமதி காலம் நிறைவடைந்த நிலையில் தற்போது முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டது. அதன்படி ரூ.9,500 கோடியில் முழு பட்ஜெட் தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.
கொரோனா ஊரடங்கு காரணமாக மாநில அரசின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பட்ஜெட்டின் மொத்த தொகையில் சில திருத்தங்களை செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் புதுவை அரசை வலியுறுத்தியது.
மத்திய அரசு ஒப்புதல்
இதை ஏற்று புதுவை அரசு ரூ.9 ஆயிரம் கோடியில் பட்ஜெட் தயார் செய்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு மீண்டும் அனுப்பியது. ஆனால் பல்வேறு காரணங்களால் பட்ஜெட்டிற்கு ஒப்புதல் பெற காலதாமதமானது. நீண்ட இழுபறிக்குப் பின் தற்போது பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து சட்டசபையை கூட்டி வருகிற 16-ந்தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதையொட்டி அமைச்சரவைக் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதில், பட்ஜெட்டில் இடம் பெறும் அம்சங்கள், புதிய அறிவிப்புகள் குறித்தும், கவர்னர் உரைக்கு இறுதி வடிவம் கொடுப்பது பற்றியும் விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. இன்னும் 8 மாதத்தில் சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில் புதுச்சேரி அரசு தாக்கல் செய்ய உள்ள இந்த பட்ஜெட் பொதுமக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
பராமரிப்பு பணி
பட்ஜெட் கூட்டம் கூட்டப்பட்டுள்ளதையொட்டி புதுச்சேரி சட்டசபை மைய மண்டபம் சுத்தம் செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். குறுகிய நாட்களிலேயே சட்டசபை கூட்டத்தை முடித்துக் கொள்ளவும் திட்டமிட்டு இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
Related Tags :
Next Story