மும்பை புறநகர் போக்குவரத்தை மேம்படுத்த ரூ.11 ஆயிரம் கோடியில் புதிய ரெயில் திட்டங்கள் உத்தவ் தாக்கரே முன்னிலையில் ஒப்பந்தம்


மும்பை புறநகர் போக்குவரத்தை மேம்படுத்த ரூ.11 ஆயிரம் கோடியில் புதிய ரெயில் திட்டங்கள் உத்தவ் தாக்கரே முன்னிலையில் ஒப்பந்தம்
x
தினத்தந்தி 10 July 2020 5:00 AM IST (Updated: 10 July 2020 3:30 AM IST)
t-max-icont-min-icon

மும்பை புறநகர் ரெயில் போக்குவரத்தை மேம்படுத்த ரூ.10 ஆயிரத்து 947 கோடியிலான புதிய திட்டங்களுக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது

மும்பை, 

நாட்டின் நிதிநகரமான மும்பையில் போக்குவரத்து உயிர்நாடியாக புறநகர் மின்சார ரெயில் சேவை விளங்குகிறது.

மின்சார ரெயில் சேவை

மத்திய மற்றும் மேற்கு ரெயில்வேக்கள் சார்பில் இயக்கப்படும் இந்த மின்சார ரெயில் சேவைகளை மும்பை பெருநகர் பகுதிகளில் தினசரி சுமார் 80 லட்சம் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய ஊழியர்களுக்காக மட்டும் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே மும்பையில் அதிகரித்து வரும் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு புறநகர் மின்சார ரெயில் வழித்தடத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

ரூ.10,947 கோடி

இந்தநிலையில், மும்பை நகர்ப்புற போக்குவரத்து திட்டம் 3-ன் கீழ் புறநகர் ரெயில்கள் சார்ந்த உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில் ஏ.சி. மின்சார ரெயில்கள் வாங்குவது, புதிய வழித்தடம் அமைப்பது போன்றவை அடங்குகிறது.

இது தொடர்பாக முதல்-மந்திரியின் அதிகாரப்பூர்வ இல்லமான வர்ஷாவில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே முன்னிலையில் மராட்டிய அரசு மற்றும் மும்பை பெருநகர வளர்ச்சிக்குழுமம் (எம்.எம்.ஆர்.டி.ஏ.), சிட்கோ, மும்பை ரெயில் விகாஷ் கழகம் ஆகிய நிறுவனங்கள் இடையே ரூ.10 ஆயிரத்து 947 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

புதிய வழித்தடங்கள்

இதன்படி, பன்வெல் - கர்ஜத் இடையே ரூ.2 ஆயிரத்து 783 கோடியில் ரெயில்வே வழித்தடம், நவிமும்பை ஐரோலி- தானே கல்வா இடையே ரூ.476 கோடியில் புதிய இணைப்பு ரெயில் பாதை, விரார்- தகானு இடையே ரூ.3 ஆயிரத்து 578 கோடி செலவில் இணைப்பு ரெயில் பாதை அமைக்கப்படுகிறது.

இதுதவிர ரூ.3 ஆயிரத்து 491 கோடி செலவில் புதிதாக 47 ஏ.சி. மின்சார ரெயில்கள் வாங்கப்பட உள்ளன.

மேலும் ரூ.551 கோடி செலவில் பயணிகள் தண்டவாளத்தை கடப்பதை தடுப்பதற்கான கருவி வாங்கப்பட உள்ளது.

கடன் உதவி

இந்த புதிய திட்ட பணிகளை மேற்கொள்வதற்கான செலவுகளை ரெயில்வே அமைச்சகம் மற்றும் மராட்டிய அரசு பகிர்ந்து கொள்கின்றன. மேலும் இந்த திட்டங்களுக்காக ஆசிய உள்கட்டமைப்பு வங்கி ரூ.3,500 கோடி கடன் வழங்குகிறது.

கடனுக்கான ஒப்பந்தம் இந்த மாதத்திலேயே கையெழுத்திடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story