கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய உச்சம்: ஒரே நாளில் 254 பேருக்கு கொரோனா
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 254 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 254 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தற்போது மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த டாக்டர்கள், செவிலியர்கள், வருவாய்த்துறையினர், காவல்துறையினர் ஆகியோர் போர் வீரர்கள் போன்று முன்னின்று தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அவர்களையும் விட்டு வைக்காமல் தாக்கி, தனது தாக்குதலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் வரை கொரோனா வைரசால் 1,285 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று 700-க்கும் மேற்பட்டோரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவுகள் வந்தது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 254 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
1,539 ஆக உயர்வு
இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், முண்டியம்பாக்கம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,539 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 788 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். 9 பேர் இறந்துள்ளனர்.
தினம் தினம் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அதன்படி கடந்த 10 நாட்களில் மட்டும் 775 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 402 பேர் கள்ளக்குறிச்சி நகர பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கோரிக்கை
இதனால் பொதுமக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர். இதை தவிர்க்க வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பது கள்ளக்குறிச்சி மக்களின் கோரிக்கையாகும்.
Related Tags :
Next Story