பர்கூர் அருகே, மாநில எல்லையில் சோதனைச்சாவடியில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
பர்கூர் அருகே மாநில எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் கலெக்டர் பிரபாகர், போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பர்கூர்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் நடந்து வருகிறது. பர்கூர் ஒன்றியம் பாலேப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து பொதுமக்களுக்கு பரிசோதனைகள் நடந்து வருகின்றன. அந்த பணிகளை கலெக்டர் பிரபாகர், போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
தொடர்ந்து வீடு, வீடாக பணியாளர்கள் மூலமாக கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணிகள் மேற்கொண்டு வருவதையும் கபசுர குடிநீர் வழங்கும் பணிகளையும் கலெக்டர் பிரபாகர் ஆய்வு செய்தார். மேலும் வீடுகளுக்கு வரும் மருத்துவ குழுவினரிடம் சளி, காய்ச்சல் குறித்த விவரங்களை தெரிவித்து ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கலெக்டர் கேட்டுக் கொண்டார்.
ஆந்திர மாநில எல்லையில் இருந்து தமிழக எல்லைக்குள் வரும் வாகனங்கள் பர்கூர் அருகே குருவிநாயனப்பள்ளி சோதனைச்சாவடியில் சோதனை செய்யப்பட்டு அனுப்பப்பட்டு வருகின்றன. அந்த பணிகளை கலெக்டர் பார்வையிட்டார். மேலும் இ-பாஸ் பெற்று அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களையும், கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெறுவது குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
இதே போல திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான ஒப்பதவாடி சோதனைச்சாவடியிலும் கலெக்டர் பிரபாகர் ஆய்வு செய்தார். மேலும் இ-பாஸ் பெறாமல் வரும் வாகனங்களை மாவட்ட எல்லைக்குள் அனுமதிக்க கூடாது என கலெக்டர் அறிவுறுத்தினார். பின்னர் கலெக்டர் பிரபாகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 ஊராட்சிகளிலும் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் குழுக்கள் அமைக்கப்பட்டு நாள்தோறும் 4 வார்டுகள் வீதம் கிருமி நாசினி மருந்து தெளித்தல், தூய்மை பணிகள் மேற்கொள்ளுதல், காலை-மாலை தலைமை மருத்துவமனைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொசுப்புழு ஒழிக்கும் பணியாளர்கள் மூலமாக வீடு, வீடாக சென்று தூய்மை பணிகள் மேற்கொள்ளுவதும், கிருமி நாசினி தெளித்தல், விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்குதல், கபசுர குடிநீர் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் வீடுகளுக்கு வரக்கூடிய மருத்துவ குழுவினரிடம் சளி, காய்ச்சல் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும். மேலும் கொரோனா தடுப்பு பணிகளுக்கு முழு அளவில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், பர்கூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சிவகுமார், பர்கூர் தாசில்தார் சித்ரா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணி, ஞானபிரகாசம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story