மாவட்டத்தில் பிளஸ்-2 இறுதி தேர்வை 28 மாணவர்கள் எழுதுகிறார்கள் அவர்கள் படித்த பள்ளிகளிலேயே தேர்வு மையம் அமைப்பு


மாவட்டத்தில் பிளஸ்-2 இறுதி தேர்வை 28 மாணவர்கள் எழுதுகிறார்கள் அவர்கள் படித்த பள்ளிகளிலேயே தேர்வு மையம் அமைப்பு
x
தினத்தந்தி 10 July 2020 5:14 AM IST (Updated: 10 July 2020 5:14 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் வருகிற 27-ந்தேதி நடக்க இருக்கும் பிளஸ்-2 இறுதி தேர்வை தனித்தேர்வர்கள் உள்பட 28 மாணவர்கள் எழுத உள்ளனர்.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் வருகிற 27-ந்தேதி நடக்க இருக்கும் பிளஸ்-2 இறுதி தேர்வை தனித்தேர்வர்கள் உள்பட 28 மாணவர்கள் எழுத உள்ளனர். அவர்கள் படித்த பள்ளிகளிலேயே தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அரசு பொதுத்தேர்வு

பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி நடைபெற்ற இறுதி தேர்வை ஊரடங்கு உத்தரவால் பல மாணவர்கள் எழுத முடியாமல் போனது. இதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்தது.இதையடுத்து தேர்வு எழுதாத மாணவர்களுக்கு, தேர்வு தேதியை அரசு அறிவித்தது. இதன்படி இந்த தேர்வை மாணவர்கள் வருகிற 27-ந்தேதி எழுத உள்ளனர்.

நுழைவுச்சீட்டு

இந்த தேர்வுக்கான புதிய நுழைவுச்சீட்டினை இணைய தளம் மற்றும் அவரவர் படித்த பள்ளிகளிலேயே வருகிற 13-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனித்தேர்வர்கள் தனித்தேர்வு மையங்களில் சென்று பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இது பற்றி கடலூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஊரடங்கு உத்தரவு காரணமாக கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 இறுதித்தேர்வை 9 மாணவர்கள் எழுதவில்லை. இது தவிர 19 தனித்தேர்வர்களும் எழுதவில்லை. மொத்தம் 28 மாணவர்கள் தேர்வு எழுதாமல் உள்ளனர். இவர்கள் தேர்வு எழுத அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இது தவிர இவர்கள் தேர்வு மையங்களுக்கு எளிதில் வர போக்குவரத்து வசதியும் ஏற்பாடு செய்து வருகிறோம். ஆனால் கட்டுப்பாட்டு பகுதியில் தேர்வு மையம் கிடையாது.

பாட புத்தகம்

மேலும் அரசு அறிவித்தபடி மாணவர்களுக்கு பாடபுத்தகம் வழங்க தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஏற்கனவே 4 கல்வி மாவட்ட அலுவலகங்களில் இருந்தும் அரசு பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசு வழிகாட்டுதல் படி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story