அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலி


அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 10 July 2020 5:22 AM IST (Updated: 10 July 2020 5:22 AM IST)
t-max-icont-min-icon

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வேலூர், 

வேலூர் ஓல்டு டவுன் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வமணி (வயது 55), ஆட்டோ டிரைவர். இவர், கொரோனா அறிகுறி காரணமாக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை செல்வமணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதனையடுத்து செல்வமணியின் உடல் அரசு விதிமுறையின்படி அடக்கம் செய்யப்பட்டது. இதில், அவருடைய குடும்பத்தினர் சிலர் மட்டும் பங்கேற்றனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 32 பேர் பலியாகி உள்ளனர்.

உயிரிழந்த செல்வமணிக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது நேற்று காலை மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்ட கொரோனா தொற்று பாதித்த நபர்கள் பட்டியல் மூலமே தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

குடியாத்தம் தாலுகாவில் 200-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் இறந்துள்ளனர்.

இந்த நிலையில் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் நெல்லூர்பேட்டை ஊராட்சி கணபதி நகரை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 51), வியாபாரி. இவர் கடந்த 5-ந்தேதி குடியாத்தம் டவுன் நெல்லூர்பேட்டையில் ஒருவரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அன்று முதல் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் அவரை உறவினர்கள் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக இறந்தார். மாலையில் வந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து குடியாத்தம் பகுதியில் கொரோனா தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.


Next Story