தஞ்சை பழைய வீட்டு வசதிவாரிய குடியிருப்பில் பொக்லின் எந்திரம் மூலம் மரங்கள் அகற்றம்


தஞ்சை பழைய வீட்டு வசதிவாரிய குடியிருப்பில் பொக்லின் எந்திரம் மூலம் மரங்கள் அகற்றம்
x
தினத்தந்தி 10 July 2020 6:10 AM IST (Updated: 10 July 2020 6:10 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் பொக்லின் எந்திரம் மூலம் மரங்களை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு அரசு ஊழியர்கள் வசித்து வருகிறார்கள். இந்த வீடுகளில் வசித்து வருபவர்கள் தங்கள் வீடுகளின் அருகே வாழை, முருங்கை மரம், நெல்லிக்காய் போன்ற பயன்தரும் மரங்களை வளர்த்து வந்தனர். இந்த நிலையில் இந்த பகுதியில் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சுத்தம் செய்து தருமாறு அங்கு குடியிருக்கும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் பொக்லின் எந்திரம் மூலம் வீடுகளை சுற்றி இருந்த புதர்களை அகற்றினர். அப்போது அவர்கள் வீடுகள் அருகே வளர்த்த வாழை, முருங்கை மரம், நெல்லிக்காய், கொய்யா, பப்பாளி போன்ற மரங்கள் மற்றும் பூச்செடிகள் போன்றவற்றையும் அகற்றினர். வாகனங்கள் நிறுத்துவதற்காக போடப்பட்டு இருந்த கொட்டகையையும் அகற்றினர்.

இதற்கு அந்த பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் நாங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். வாழை, உள்ளிட்ட மரம், செடிகளை பிள்ளைகளை வளர்ப்பது போல வளர்த்து வந்தோம். ஆனால் எல்லா மரங்களையும் அகற்றி வருகின்றனர். இங்குள்ள குடியிருப்புகள் அனைத்தும் மோசமாக உள்ளது.

பல வீடுகளில் மேற்கூரை பெயர்ந்து விழுந்த வண்ணம் உள்ளது. அனைத்து கட்டிங்களிலும் செடிகள், மரங்கள் முளைத்துள்ளன. இதனை அகற்றுமாறும், குடியிருப்புகளை சரி செய்து தருமாறும் பலமுறை அதிகாரிகளை கேட்டும் இதுவரை எந்த நடவடிககையும் எடுக்கவில்லை. ஆனால் நாங்கள் வளர்த்த மரங்கள் மற்றும் செடிகளை மட்டும் அகற்றி வருகின்றனர். இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என கூறினர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிராஜன், தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் வசிப்பவர்கள், விதிமுறைகளின் படி பலன் தரும் மரங்கள், செடி, கொடிகளை நடக்கூடாது. நிழல் மரும் மரங்களை வேண்டுமானால் நடலாம். இதை அகற்றுமாறு நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளது. அப்போது எந்த கருத்தும் தெரிவிக்காமல் இப்போது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என தெரிவித்தனர். மேலும் வாகனம் நிறுத்துவதற்காக கொட்டகை அமைக்க எழுதி கொடுங்கள். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்தனர்.

Next Story