கொரோனா தொற்று பரிசோதனையை அதிகரிக்க நடவடிக்கை: ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் கே.சி. வீரமணி பேட்டி
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கொரோனா தொற்று பரிசோதனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.
வேலூர்,
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணிகள், சிகிச்சை முறைகள், கட்டுப்படுத்தும் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர்கள் சண்முகசுந்தரம், சிவன்அருள், திவ்யதர்ஷினி ஆகியோர் தலைமை தாங்கினர். போலீஸ் சூப்பிரண்டுகள் பிரவேஷ்குமார், விஜயகுமார், மயில்வாகனன், மாவட்ட வருவாய் அலுவலர்கள் பார்த்திபன், தங்கையா பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் யாஸ்மின், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன் மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்த நபர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள், கொரோனாவை கட்டுப்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகள், தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை கண்காணிக்கும் முறைகள், மாவட்ட எல்லை சோதனைச்சாவடிகளில் வாகன சோதனை மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வுகள் குறித்து 3 மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளிடம் அமைச்சர்கள் கேட்டறிந்தனர்.
அதைத்தொடர்ந்து அமைச்சர்கள் கூறுகையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தொற்றை தடுப்பது தொடர்பாக 3 கலெக்டர்களும் கலந்தாய்வு கூட்டம் நடத்த வேண்டும். பொதுமக்களுக்கு நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் வழங்க வேண்டும். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், போலீசார், அரசு அதிகாரிகள் மிகுந்த கவனமுடன் பணியாற்றி தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும். திருமணம், இறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அரசின் விதிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் கே.சி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இதுவரை 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதில், 4,100 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் 2 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இறப்பவர்களின் விகிதம் 1 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. கொரோனா தொற்று தடுப்பு பணிகளை அரசு சிறப்பாக செய்து வருகிறது.
ஆனால் தி.மு.க.வை சேர்ந்த எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் அந்தந்த மாவட்ட கலெக்டரை சந்தித்து கொரோனா தொடர்பான நடவடிக்கைகள் குறித்து கேட்கின்றனர். அப்போது அவர்கள் பணிகள் சிறப்பாக நடைபெறுவதாக கலெக்டருக்கு பாராட்டு தெரிவிக்கின்றனர். பின்னர் வெளியே வந்து கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் சரியாக மேற்கொள்ளவில்லை என்று வேண்டுமென்றே பொய்யாக குற்றம் சாட்டுகிறார்கள். அவர்களால் எந்த குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியாத காரணத்தால் பொதுவாக படுக்கை, குடிநீர் வசதி இல்லை. மருத்துவ உபகரணங்கள் கிடையாது என்று கூறுகிறார்கள். அவர்களின் குற்றச்சாட்டை யாரும் நம்பமாட்டார்கள்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல இடங்களுக்கு சென்று கொரோனா தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அமைச்சர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதற்கு காரணம் நாங்கள் களத்தில் பணியாற்றுகிறோம். மக்களை காப்பாற்ற வேண்டிய தார்மீக பொறுப்பு எங்களுக்கு உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரிசோதனை மையம் விரைவில் அமைக்கப்பட உள்ளது. மேலும் 3 மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பரிசோதனையை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபரின் செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story