முதல்-அமைச்சரின் சிறப்பான திட்டங்களால் தமிழகத்தில், குடிநீர் தட்டுப்பாடு இல்லை; அமைச்சர் காமராஜ் பேட்டி


முதல்-அமைச்சரின் சிறப்பான திட்டங்களால் தமிழகத்தில், குடிநீர் தட்டுப்பாடு இல்லை; அமைச்சர் காமராஜ் பேட்டி
x
தினத்தந்தி 10 July 2020 1:22 AM GMT (Updated: 10 July 2020 1:22 AM GMT)

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்து வரும் சிறப்பான நீர் மேலாண்மை திட்டங்களால் தமிழகத்தில், குடிநீர் தட்டுப்பாடு இல்லை என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.

மன்னார்குடி,

மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் காமராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன், மன்னார்குடி உதவி கலெக்டர் புண்ணியக்கோட்டி, திருவாரூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம், மன்னார்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெயக்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்பு விகிதம் 1.37 சதவீதமாக உள்ளது. ஆனால் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்து வீடுகளுக்கு செல்பவர்கள் 62 சதவீதத்திற்கு மேலாக உள்ளது. ஊரடங்கு விதிமுறைகளை முறையாக பின்பற்றும் பகுதிகளில் கொரோனா தொற்று என்பது இல்லை.

தமிழகம் முழுவதும் 521 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்ட நாள் முதல், இந்த ஆண்டு தான் 26 லட்சத்து 24 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நெல் கொள்முதலில் இது ஒரு வரலாற்று மைல்கல் ஆகும். மேலும் குறுவை பருவம் செப்டம்பர் மாதம் வரை தொடரும் என்பதால் எதிர்பார்த்த 28 லட்சம் டன் நெல் கொள்முதலை நெருங்கி கொண்டு இருக்கிறோம்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்து வரும் சிறப்பான நீர் மேலாண்மை திட்டங்களால் தமிழகத்தில் எங்கும் குடிநீர் தட்டுப்பாடு இல்லை. விவசாயத்திற்கும் நீர் தட்டுப்பாடு இல்லை. விவசாயிகளுக்கு தண்ணீர் பிரச்சினை இல்லை. விவசாயிகளுக்கு தட்டுபாடு இன்றி மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் கூத்தாநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட கொரோனா வைரஸ் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அமைச்சர் காமராஜ் ஆய்வு செய்தார். அப்போது தூய்மை பணிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நகராட்சி ஆணையர் லதாவிடம் அமைச்சர் கேட்டறிந்தார். மேலும் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கோள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் ஆனந்த், மன்னார்குடி உதவி கலெக்டர் புண்ணியக்கோட்டி, சுகாதார துணை இயக்குனர் விஜயகுமார், தாசில்தார் தெய்வநாயகி ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story