புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 46 பேருக்கு கொரோனா தொற்று; ஆரம்ப சுகாதார நிலைய நர்சு, ஊழியரும் பாதிப்பு


புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 46 பேருக்கு கொரோனா தொற்று; ஆரம்ப சுகாதார நிலைய நர்சு, ஊழியரும் பாதிப்பு
x
தினத்தந்தி 10 July 2020 3:05 AM GMT (Updated: 10 July 2020 3:05 AM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 46 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் நர்சு, ஊழியருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் புதுக்கோட்டை அடப்பன்வயலை சேர்ந்த 32 வயது மற்றும் 19 வயது வாலிபர்கள், சவுராஷ்டிரா தெருவை சேர்ந்த 3 பேர், வண்டிபேட்டை தெருவை சேர்ந்த 15 மற்றும் 16 வயது சிறுமிகள், கோல்டன் நகரை சேர்ந்த 19 வயது பெண், எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த 34 வயது வாலிபர், திருவள்ளுவர் நகரை சேர்ந்த 31 வயது வாலிபர், இறைவன் நகரை சேர்ந்த 45 வயது ஆண், போஸ் நகரை சேர்ந்த 32 வயது வாலிபர், சாத்தப்பா நகரை சேர்ந்த 57 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கறம்பக்குடி ஒன்றியத்தில் கிராம பகுதியில் மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்தநிலையில் நேற்று முதல் முறையாக பேரூராட்சி பகுதியில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் கறம்பக்குடி கச்சேரி வீதியில் வசிக்கும் நர்சுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் மழையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

அவருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த நோயாளிகள் வெளியேற்றப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதேபோல் நகைக்கடை உரிமையாளர் ஒருவருக்கும், ஜவுளி கடை ஊழியர் ஒருவருக்கும் தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து அவர்கள் வசித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன.

வீதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அறந்தாங்கி அருகே நாகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் ஒருவருக்கும் கொரோனா தொற்று உள்ளது நேற்று உறுதி செய்யப்பட்டது.

கந்தர்வகோட்டையில் இந்திரா நகர் 2-ம் வீதியை சேர்ந்த ஒருவர், கடந்த 6-ந் தேதி விபத்தில் சிக்கி, கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் வசித்த இந்திரா நகர் 2- ம் வீதி அடைக்கப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 495 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 281 பேர் சிகிச்சையில் உள்ளனர். 206 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் நேற்று மட்டும் 20 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை இறப்பு எண்ணிக்கை 8 ஆக உள்ளது.என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மருந்து கடைகள் தவிர அனைத்து கடைகளும் 5 நாட்கள் மூடப்படும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story