நீலகிரி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


நீலகிரி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 10 July 2020 3:42 AM GMT (Updated: 10 July 2020 3:42 AM GMT)

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு 172 ஆக உயர்ந்து உள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 160 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் ஒருவர் வேறு மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதனால் பாதிப்பு 159 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

அதாவது காட்டேரி அருகே தூரட்டி கிராமத்தை சேர்ந்த 48 வயது பெண், 13 வயது சிறுமி, தங்காடு அருகே மணிஹட்டியை சேர்ந்த 41 வயது ஆண், மேல் கவ்வட்டியை சேர்ந்த 13 வயது சிறுவன், எல்லநள்ளியை சேர்ந்த 48 வயது பெண், ஊட்டி அருகே தூனேரி கிராமத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி, ஊட்டியை சேர்ந்த 25 வயது ஆண், மைசூருவில் உள்ள தனது பேத்தி திருமணத்துக்கு சென்று வந்த மேல்கூடலூரை சேர்ந்த 61 வயது முதியவர், தாம்பட்டியில் நடந்த திருமணத்தில் கலந்து கொண்ட அதே பகுதியை சேர்ந்த 68 வயது முதியவர் ஆகியோருக்கு தொற்று உறுதியானது.

குன்னூர் அருகே ஓட்டுப்பட்டரையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நேரிகுடா கிராமத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர்கள் 33 வயது ஆண், 27 வயது பெண், 41 வயது ஆண், 33 வயது பெண் ஆகியோர் ஆவர். இதனால் நீலகிரியில் பாதிப்பு 172 ஆக உயர்ந்து உள்ளது.

இதில் 49 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மீதம் உள்ள 123 பேரில் 78 பேர் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையிலும், 10 பேர் குன்னூர் அரசு மருத்துமனையிலும், 35 பேர் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார். இதற்கிடையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மஞ்சூர் அருகே சாம்ராஜ் எஸ்டேட்டுக்கு சொந்தமான தனியார் ஆஸ்பத்திரி மூடப்பட்டது. அங்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது.

Next Story