குடிபோதையில் தகராறு: மனைவியை தீ வைத்து எரித்த தொழிலாளி கைது


குடிபோதையில் தகராறு: மனைவியை தீ வைத்து எரித்த தொழிலாளி கைது
x
தினத்தந்தி 10 July 2020 4:16 AM GMT (Updated: 10 July 2020 4:16 AM GMT)

கோவையில் குடிபோதையில் மனைவியை தீ வைத்து எரித்த தொழிலாளி கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கோவை,

கோவை ராமநாதபுரம் அம்மன் குளம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 56), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கமலம்மாள் (51). இவர்களுடன் கமலம்மாளின் தாய் காளியம்மாள் (71) என்பவரும் வசித்து வருகிறார். மதுப்பழக்கத்துக்கு அடிமையான தங்கராஜ், தினசரி குடித்து விட்டு தனது மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மது குடித்துவிட்டு தங்கராஜ் வீட்டுக்கு வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தங்கராஜ், தனது மனைவியை தாக்கினார். பின்னர் வீட்டில் இருந்த மண்எண்ணெயை கமலம்மாள் மீது ஊற்றி தீப்பற்ற வைத்தார். இதனால் அவர் வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டார்.

இதைக்கேட்டு ஓடிவந்த காளியம்மாள் தனது மகளை காப்பாற்ற முயன்றார். அப்போது அவர் மீதும் தீப்பற்றியதால் படுகாயம் அடைந்தார். உடனே தங்கராஜ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். தீக்காயத்தால் அலறித்துடித்த அவர்கள் 2 பேரின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இது குறித்த தகவலின் பேரில் ராமநாதபுரம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீக்காயம் அடைந்த அவர்கள் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில், காளியம்மாள் குணமடைந்து வீடு திரும்பினார். கமலம்மாள், உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கராஜை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பொள்ளாச்சி சிறையில் அடைத்தனர்.

Next Story