சிறுமுகை வனப்பகுதியில் யானைகள் உயிரிழப்பை கண்டறிய கண்காணிப்பு குழு ஆய்வு
சிறுமுகை வனப்பகுதியில் காட்டு யானைகள் தொடர் உயிரிழப்பை கண்டறிய கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை வனக்கோட்டத்தில் கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு ஏராளமான காட்டு யானைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.
இந்த நிலையில் கோவை வனக்கோட்டத்தில் கடந்த 6 மாதங்களில் மொத்தம் 14 காட்டு யானைகள் உயிரிழந்தன. இதில் கடந்த 6 மாதத்தில் மட்டும் மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனச்சரகத்தில் மட்டும் 12 யானைகள் இறந்தன. இது வன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையே கோவை வனக்கோட்டத்தில் யானைகள் உயிரிழப்பதற்கான காரணங்களை கண்டறிய கோவை மாவட்ட வன அதிகாரி வெங்கடேஷ் தலைமையில், உதவி வனப்பாதுகாவலர் செந்தில்குமார் மேற்பார்வையில் சிறுமுகை வனச்சரக அதிகாரி செந்தில்குமார், பயிற்சி வனச்சரக அதிகாரிகள், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்பட 20 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவை சேர்ந்தவர்கள் உதவி வனப்பாதுகாவலர் செந்தில்குமார் மற்றும் சிறுமுகை வனச்சரக அதிகாரி செந்தில்குமார் ஆகியோர் மேற்பார்வையில் 5 குழுக்களாக பிரிந்து சிறுமுகை வனச்சரகம் பெத்திக்குட்டை வனப்பகுதிக்கு உட்பட்ட மயில் மொக்கை, கருப்பராயன் கோவில் ஆகிய பகுதிகளில் கடந்தசில நாட்களாக தீவிர ஆய்வு பணியை மேற்கொண்டனர்.
எந்தெந்த பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது, தாவர வகைகள், யானைகளின் வழித்தடத்தில் அமைக்கப்பட்ட சோலார் மின் வேலிகள் மற்றும் பவானிசாகர் நீர்த்தேக்க பகுதி உள்ளிட்ட வனப்பகுதிகளில் அதன் இயற்கை தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதுதவிர புதுக்காடு பகுதியில் இருந்து மோட்டார் படகு மூலம் நீர்த்தேக்க பகுதியை கடந்து கூத்தாமண்டி வனப்பகுதிக்கு சென்று அங்கு யானைகளின் நடமாட்டம் குறித்தும் ஆய்வு செய்தனர்.
மேலும் இந்த குழுவை சேர்ந்தவர்கள் மேட்டுப்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் ஆய்வு பணியை மேற்கொள்ள உள்ளனர்.
அதன் பின்னர் அறிக்கை தயாரித்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து யானைகளின் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story