அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா எதிரொலி அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து எடியூரப்பா, வீட்டு தனிமைக்கு சென்றார்
முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்த எடியூரப்பா தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.
கார் டிரைவருக்கு கொரோனா
எடியூரப்பாவுக்கு 77 வயது ஆகிறது. இந்த நிலையில் கர்நாடகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவத் தொடங்கியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தினமும் மந்திரிகள், மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் அவர் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் கொரோனா பாதிப்பு விவரங்களை கேட்டறிந்து, அதற்கு ஏற்ப கொரோனா பரவலை கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு எடியூரப்பா உத்தரவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் கர்நாடகத்தில் கடந்த மாதம் இறுதியில் இருந்து கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பும், பலியும் உயர்ந்து வருகிறது. இதனால் எடியூரப்பா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். கர்நாடகத்தில் 6 எம்.எல்.ஏ.க்கள், 2 எம்.எல்.சிக்கள், முன்னாள் மந்திரி ஜனார்த்தன பூஜாரி உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஊழியர்களுக்கும் பாதிப்பு
இதற்கிடையே கர்நாடகத்தில் குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் வரை பெங்களூருவில் மட்டும் கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டிவிட்டது. தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. இதனால் நகரவாசிகள் பீதியடைந்து உள்ளனர். இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பா காரின் மாற்று டிரைவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
அவருடன் முதல்-மந்திரி எடியூரப்பா நேரடியாக தொடர்பில் இருக்கவில்லை. பெங்களூருவில் டாலர்ஸ் காலனியில் உள்ள முதல்-மந்திரி எடியூரப்பாவின் தனியார் இல்லத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதே போல் முதல்-மந்திரியின் அலுவலக இல்லமான கிருஷ்ணாவிலும் 2 பேருக்கு, அவர் வசிக்கும் காவேரி இல்லத்திலும் சிலருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பெங்களூரு மாநகராட்சி சார்பில் அந்த 3 இடங்களிலும் துப்புரவு தொழிலாளர்கள் கிருமிநாசினி தெளித்து தூய்மைபடுத்தினர். அதுபோல் முதல்-மந்திரியின் தவளகிரி இல்ல சமையல்காரர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்-மந்திரியின் குடியிருப்புகள், அலுவலகம் ஆகியவற்றில் பணியாற்றி வரும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தனிமையில் எடியூரப்பா
இதனால் முதல்-மந்திரி எடியூரப்பா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் தனது அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தார். மேலும் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
இதைதொடர்ந்து முதல்-மந்திரியின் இல்ல அலுவலகமான கிருஷ்ணா, அலுவலக இல்லமான காவேரி ஆகியவை முழுவதும் நேற்று கிருமிநாசினி மருந்தால் மாநகராட்சி ஊழியர்களும், சுகாதாரத்துறையினரும் சுத்தப்படுத்தினர். இதில் கிருஷ்ணா இல்லத்தில் வைத்து தான் எடியூரப்பா மந்திரிகள், அதிகாரிகளுடன் கொரோனா தொடர்பாக ஆலோசனை நடத்தி வந்தார். சமீபத்தில் மத்திய குழுவினரும் அந்த இல்லத்தில் வைத்து அவரை சந்தித்து பேசினர். கொரோனா பரவலை தொடர்ந்து காவேரி, கிருஷ்ணா இல்லங்களுக்கு 5 நாட்கள் மந்திரிகள், அதிகாரிகள், ஊழியர்கள் யாரும் வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கவலைப்பட தேவை இல்லை
இதுகுறித்து எடியூரப்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணா இல்லத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நான் தனிமைப்படுத்தி கொண்டு, வீட்டில் இருந்தபடியே தொடர்ந்து பணியாற்ற முடிவு செய்துள்ளேன். காணொலிக்காட்சி மூலம் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க முடிவு செய்துள்ளேன்.
நான் நலமாக இருக்கிறேன். எனது உடல்நிலையை பற்றி யாரும் கவலைப்பட தேவை இல்லை. பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து அனைவரும் தற்காத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு எடியூரப்பா தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story