கொரோனா நோயாளி உடல் மாற்றி ஒப்படைப்பு: 4 நர்சுகள் பணிநீக்கம் மாநகராட்சி கமிஷனர் அதிரடி


கொரோனா நோயாளி உடல் மாற்றி ஒப்படைப்பு: 4 நர்சுகள் பணிநீக்கம் மாநகராட்சி கமிஷனர் அதிரடி
x
தினத்தந்தி 11 July 2020 3:30 AM IST (Updated: 11 July 2020 1:51 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நோயாளி உடல் மாற்றி ஒப்படைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 நர்சுகளை பணிநீக்கம் செய்து தானே மாநகராட்சி கமிஷனர் விபின் சர்மா உத்தரவிட்டுள்ளார்.

மும்பை, 

கொரோனா நோயாளி உடல் மாற்றி ஒப்படைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 நர்சுகளை பணிநீக்கம் செய்து தானே மாநகராட்சி கமிஷனர் விபின் சர்மா உத்தரவிட்டுள்ளார்.

உடல் மாற்றி ஒப்படைப்பு

தானே பால்கும் பகுதியில் மாநகராட்சி சார்பில் 1,000 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இங்கு நோய் தொற்றுக்கு பலியான கொரோனா நோயாளியின் உடலை ஆஸ்பத்திரி ஊழியர்கள் வேறு குடும்பத்தினருக்கு மாற்றி ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மறுநாள் இறந்த உறவினரின் உடலும் அதே குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டதால் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த சம்பவத்தில் அலட்சியமாக நடந்து கொண்ட ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜனதாவினர் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியிடம் மனு கொடுத்தனர்.

4 நர்சுகள் பணிநீக்கம்

இந்தநிலையில் தானே மாநகராட்சி கமிஷனர் விபின் சர்மா கொரோனா நோயாளியின் உடலை மாற்றி வழங்கிய 4 மாநகராட்சி செவிலியர்களை பணிநீக்கம் செய்து உள்ளார்.

மேலும் ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் யோகேஷ் சர்மா பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக டாக்டர் அனிருதா மல்காவ்கர் ஆஸ்பத்திரி கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல டாக்டர் யோகேஷ் சர்மாவுக்கு கீழ் பணியாற்றிய ஒரு டாக்டர், நர்ஸ் ஆகியோர் 7 நாட்கள் பயிற்சிக்காக வேறு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்துக்காக தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் மாநகராட்சி கமிஷனர் விபின் சர்மா நிருபர்களிடம் தெரிவித்தார்.

Next Story