கோட்டார் மார்க்கெட் மூலமாக பரவும் கொரோனா: ஒரே நாளில் 20 பேருக்கு தொற்று தடுப்பு நடவடிக்கை தீவிரம்


கோட்டார் மார்க்கெட் மூலமாக பரவும் கொரோனா: ஒரே நாளில் 20 பேருக்கு தொற்று தடுப்பு நடவடிக்கை தீவிரம்
x
தினத்தந்தி 11 July 2020 3:30 AM IST (Updated: 11 July 2020 2:25 AM IST)
t-max-icont-min-icon

கோட்டார் மார்க்கெட் மூலமாக நேற்று 20-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

நாகர்கோவில்,

கோட்டார் மார்க்கெட் மூலமாக நேற்று 20-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

கொரோனா பரவல்

குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதிலும், மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலில் தொற்றின் தாக்கம் விஸ்வரூபமெடுத்து வருகிறது. வடசேரி மார்க்கெட்டில் இதுவரை 46 வியாபாரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். பின்னர் அவர்களுடன் தொடர்பில் இருந்த 30-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டது. வடசேரி சந்தையை புரட்டி போட்ட கொரோனா, கோட்டார் மார்க்கெட்டையும் பதம் பார்க்க தொடங்கி உள்ளது.

கோட்டார் மார்க்கெட்டில் உள்ள கடை ஊழியர் ஒருவருக்கு முதன் முதலில் தொற்று உருவானது. இதைத் தொடர்ந்து அந்த கடையில் வேலை பார்த்த மற்ற 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும் அங்குள்ள மற்றொரு கடை ஊழியருக்கும் நேற்று முன்தினம் தொற்று உறுதியானது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

20-க்கும் மேற்பட்டோர்...

அதே சமயத்தில், அவர்களின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. பரிசோதனை முடிவுகள் நேற்று காலை வெளியானது. இதில் கோட்டார் மார்க்கெட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 20-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

இதையடுத்து அனைவரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கோட்டார் மார்க்கெட்டில் இருந்து தெற்கு சூரங்குடியை சேர்ந்த ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த 52 வயது ஆண், அவருடைய மனைவி மற்றும் 2 மகன்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

வியாபாரிகள் அச்சம்

கோட்டார் மார்க்கெட்டில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வியாபாரிகள் அச்சம் அடைந்து உள்ளனர். கடைக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனாலும் கோட்டார் மார்க்கெட்டுகளில் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் செல்கிறது. பொதுமக்கள் கடைகளில் முண்டியடித்துக் கொண்டு பொருட்களை வாங்குகிறார்கள். இதனால் பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையே கோட்டார் மார்க்கெட் முழுவதும் நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கிருமி நாசினி தெளிக்கும் பணிகளிலும், பிளச்சிங் பவுடர் போடும் பணிகளிலும் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

Next Story