நம்பியூர் அருகே பயங்கரம் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை சாக்கு மூட்டையில் பிணம் கிடந்தது


நம்பியூர் அருகே பயங்கரம் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை சாக்கு மூட்டையில் பிணம் கிடந்தது
x
தினத்தந்தி 11 July 2020 4:00 AM IST (Updated: 11 July 2020 3:52 AM IST)
t-max-icont-min-icon

நம்பியூர் அருகே ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவருடைய பிணம் சாக்குமூட்டையில் கிடந்தது.

நம்பியூர், 

நம்பியூர் அருகே ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவருடைய பிணம் சாக்குமூட்டையில் கிடந்தது.

ஆட்டோ டிரைவர்

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கோட்டுபுள்ளாம்பாளையத்தை சேர்ந்தவர் குமார் என்கிற குழந்தைவேல் (வயது 30). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி இந்துமதி (26).

குழந்தைவேல் நம்பியூர் அருகே உள்ள குருமந்தூரில் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் வெளியே செல்வதாக இந்துமதியிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இந்துமதி, கணவர் ஆட்டோவில் எங்காவது வாடகைக்கு சென்று இருப்பார் என்று நினைத்திருந்தார்.

சாக்குமூட்டையில் பிணம்

இந்தநிலையில் நேற்று காலை கோட்டுப்புள்ளாம்பாளையம் ஏரிக்கரையில் ஒரு சாக்குமூட்டை கிடந்தது. பார்ப்பதற்கு வித்தியாசமாக காணப்பட்டதால் அப்பகுதி மக்கள் உடனே நம்பியூர் போலீசாருக்கு இதுபற்றி தகவல் கொடுத்தார்கள். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று, மூட்டையை பிரித்து பார்த்தார்கள். உள்ளே வெட்டுக்காயங்களுடன் குழந்தைவேலின் பிணம் இருந்தது. இதைப்பார்த்து அப்பகுதி மக்களும் அதிர்ச்சி அடைந்தார்கள். அதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.

கள்ளக்காதல் தகராறா?

சாக்குமூட்டை கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் அங்கும், இங்கும் ஓடிய மோப்பநாய் பின்னர் நின்றுவிட்டது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

கள்ளக்காதல் தகராறில் யாராவது குழந்தைவேலை அடித்து கொலை செய்து சாக்குமூட்டையில் பிணத்தை கட்டி கொண்டுவந்து ஏரிக்கரையில் போட்டார்களா? அல்லது நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா? என்று தெரியவில்லை.

இதுகுறித்து நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story