மாவட்டத்தில் 59,149 பேருக்கு கொரோனா பரிசோதனை கலெக்டர் ராமன் தகவல்


மாவட்டத்தில் 59,149 பேருக்கு கொரோனா பரிசோதனை கலெக்டர் ராமன் தகவல்
x
தினத்தந்தி 11 July 2020 4:30 AM IST (Updated: 11 July 2020 4:15 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் 59,149 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் ராமன் கூறினார்.

சேலம், 

சேலம் மாவட்டத்தில் 59,149 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் ராமன் கூறினார்.

கலெக்டர் ஆய்வு

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சேலம் மாநகராட்சியில் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்ட நபர்கள் தங்கி இருந்த பகுதிகளில் அமைப்பட்டுள்ள நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு கொரோனா (ஸ்வாப்) பரிசோதனை செய்யப்பட்டு வருவதை கலெக்டர் ராமன், நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று கண்டறியப்பட்டவர்கள் தங்கி இருந்த பகுதிகளில் கடந்த மாதம் 23-ந் தேதி முதல் இன்று (நேற்று) வரை மொத்தம் 208 இடங்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இவற்றில் 82 பகுதிகள் நோய் தொற்று இல்லாத பகுதிகளாக மாறியுள்ளதால் இக்கட்டுப்பாட்டு பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 126 பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, இந்த பகுதிகளில் உள்ள 10 ஆயிரத்து 861 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

59,149 பேருக்கு பரிசோதனை

கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்ட நபர்கள் தங்கி இருந்த பகுதிகளில் அமைப்பட்டுள்ள நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள பொதுமக்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் நோய் அறிகுறி இருப்பது கண்டறியப்படும் நபர்களுக்கும் சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே, 55,078 பேருக்கு ஸ்வாப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 14 பேருக்கும், நேற்று 2 ஆயிரத்து 57 பேருக்கும் ஆக மொத்தம் சேலம் மாவட்டத்தில் 59,149 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று இருக்கின்றதா என்பதற்கான ஸ்வாப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு ஸ்வாப் பரிசோதனை தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, சேலம் மணக்காடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் தாதகாப்பட்டி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கொரோனா பரிசோதனை செய்யப்படுவதை கலெக்டர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், மாநகர் நல அலுவலர் பார்த்தீபன் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story