சேலத்தில் விடிய, விடிய மழை: ராட்சத மரம் முறிந்து வீட்டின் மீது விழுந்தது 5 பேர் உயிர் தப்பினர்
சேலத்தில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய மழை பெய்ததால் ராட்சத மரம் முறிந்து வீட்டின் மீது விழுந்தது. இதில் 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சேலம்,
சேலத்தில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய மழை பெய்ததால் ராட்சத மரம் முறிந்து வீட்டின் மீது விழுந்தது. இதில் 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மழை
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை கொட்டியது. நள்ளிரவு 12 மணி வரை மழைக்கான அறிகுறி இல்லாமல் இருந்து வந்த நிலையில் அதன் பிறகு மழை பெய்தது. நேற்று அதிகாலை 2 மணி அளவில் பலத்த மழை பெய்தது. பின்னர் விடிய, விடிய பெய்த சாரல் மழை நேற்று காலை 8 மணி வரை நீடித்தது.
இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல், காடையாம்பட்டி, ஏற்காடு, ஓமலூர், மேட்டூர், ஆத்தூர், கெங்கவல்லி, தம்மம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. ஓமலூர் சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ராட்சத மரம் விழுந்தது
சேலத்தில் பெய்த மழையால் குமாரசாமிப்பட்டி பகுதியில் உள்ள ராஜாஜி தெருவில் இருந்த ராட்சத மரம் ஒன்று காலை 5 மணிக்கு அப்படியே முறிந்து வீட்டின் மீது விழுந்தது. இதில், வீட்டின் அருகே நின்றிருந்த 5 பேர் அங்கிருந்து ஓடி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் வீடு சேதம் அடைந்தது. மரம் முறிந்ததை அறிந்த மாநகராட்சி ஊழியர்கள் உடனே சம்பவ இடத்துக்கு சென்று மரத்தை வெட்டி அங்கிருந்து அகற்றினர். சாலையில் மரம் விழுந்ததால் ராஜாஜி தெரு பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது.
சேலத்தில் விடிய, விடிய பெய்த மழையால் சேலம் மாநகராட்சி வணிக வளாகத்தில் இயங்கி வந்த தற்காலிக காய்கறி கடைகள், அஸ்தம்பட்டி, சூரமங்கலம், தாதகாப்பட்டி, அம்மாபேட்டை உழவர் சந்தைகளில் பொதுமக்களின் வருகை குறைவாக காணப்பட்டது. சாலையோர காய்கறி கடை வியாபாரிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். சேலம் லீ பஜார், பால் மார்க்கெட், செவ்வாய்பேட்டை பகுதிக்கு வட மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் வந்த சரக்குகளை இறக்க முடியாமல் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
மழை அளவு
ஏற்காடு மலைப்பாதையில் 60 அடி பாலம் அருகே மரம் ஒன்று முறிந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் இதுபற்றி ஏற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் சுமார் 3 மணி நேரத்துக்கு மேல் ஏற்காடு மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழையளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-
காடையாம்பட்டி- 125, ஏற்காடு-84, ஆணைமடுவு -63, கரிய கோவில்-50, தம்மம்பட்டி-40, பெத்தநாயக்கன்பாளையம்- 20, ஓமலூர்- 19, ஆத்தூர்- 17.8, மேட்டூர் -16.6, எடப்பாடி-16, சேலம்- 13.8, சங்ககிரி-13.2, வீரகனூர்-7, வாழப்பாடி-2.
Related Tags :
Next Story