தேனி மாவட்டத்தில் ராணுவ வீரர், செவிலியர்கள் உள்பட 108 பேருக்கு கொரோனா


தேனி மாவட்டத்தில் ராணுவ வீரர், செவிலியர்கள் உள்பட 108 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 10 July 2020 11:56 PM GMT (Updated: 10 July 2020 11:56 PM GMT)

தேனி மாவட்டத்தில் நேற்று ராணுவ வீரர், செவிலியர்கள் உள்பட 108 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1,495 ஆக உயர்ந்துள்ளது.

தேனி,

கொரோனா வைரஸ் பாதிப்பு தேனி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் 1,387 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 108 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதன்படி, தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலக இளநிலை உதவியாளர், மாவட்ட கோர்ட்டில் வேலை பார்க்கும் அல்லிநகரத்தை சேர்ந்த ஊழியர், ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர் அவருடைய தந்தை, பங்களாமேடு பகுதியை சேர்ந்த கணவன், மனைவி ஆகியோர் உள்பட தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதிகளில் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

ராஜதானியை சேர்ந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை மேலாளருக்கும், அம்மச்சியாபுரத்தில் 3 பேருக்கும், ஆண்டிப்பட்டி, சித்தையகவுண்டன்பட்டி, திருமலாபுரம் ஆகிய ஊர்களில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெரியகுளம், சில்வார்பட்டி ஆகிய ஊர்களில் தலா 3 பேருக்கும், ஜெயமங்கலத்தில் 2 பேருக்கும், எ.புதுப்பட்டி, தேவதானப்பட்டி, வடபுதுப்பட்டி, தர்மாபுரி ஆகிய ஊர்களில் தலா ஒருவருக்கும் பாதிப்பு உறுதியாகி உள்ளது. தேனி அருகே அரண்மனைப்புதூரில் 85 வயது முதியவர், பழனிசெட்டிபட்டியில் 2 பேர் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கம்பத்தில் 1 வயது ஆண் குழந்தை, குழந்தையின் தாய், 2 வயது பெண் குழந்தை உள்பட 25 பேருக்கும், க.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் கூடலூரை சேர்ந்த செவிலியர் மற்றும் கூடலூரை சேர்ந்த ராணுவ வீரர், அவருடைய தாய், சகோதரர், ஏலக்காய் தோட்ட உரிமையாளரின் மனைவி, மகன் ஆகியோர் உள்பட 13 பேருக்கும், சின்னமனூரில் தம்பதி, 84 வயது முதியவர் உள்பட 6 பேருக்கும், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செவித்திறன் பரிசோதிக்கும் ஊழியராக பணியாற்றும் உத்தமபாளையத்தை சேர்ந்த 38 வயது நபருக்கும், காமயகவுண்டன்பட்டியில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

நாகையகவுண்டன்பட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 6 பேருக்கும், கம்பம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் பணியாற்றிய ராயப்பன்பட்டியை சேர்ந்த செவிலியர் உள்பட அதே ஊரைச் சேர்ந்த 3 பேருக்கும், போடியில் தாய்-மகள் உள்பட 11 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

ஒரே நாளில் 108 பேருக்கு பாதிப்பு உறுதியானதால், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,495 ஆக அதிகரித்து உள்ளது. இதற்கிடையே நேற்று முன்தினம் காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் சித்த மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, நேற்று மூடப்பட்டது. இது 3 நாட்கள் மூடப்பட்டு இருக்கும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story