திருச்சி மலைக்கோட்டை பகுதியில் 14 நாட்கள் கடைகள் அடைப்பு


திருச்சி மலைக்கோட்டை பகுதியில் 14 நாட்கள் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 11 July 2020 8:26 AM IST (Updated: 11 July 2020 8:26 AM IST)
t-max-icont-min-icon

128 பேருக்கு கொரோனா உறுதியானதால் திருச்சி மலைக்கோட்டை பகுதியில் இன்று (சனிக்கிழமை) முதல் 14 நாட்கள் கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மலைக்கோட்டை,

திருச்சி மாநகரில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும், கடைகள் திறப்பதற்கு தடையின்றி தளர்வு வழங்கப்பட்டு விட்டதால், எப்போதும்போல போக்குவரத்தும், ஆட்கள் நடமாட்டமும் இருந்து கொண்டே உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

திருச்சி கோட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட பெரியகடைவீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தினமும் பலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படும் நிலை உள்ளது. அதை இன்னமும் சிலர் உணராமல் கடைகளை திறந்து வழக்கம்போல வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் கோட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட 16, 17 மற்றும் 18 வார்டு பகுதிகளில் மட்டும் 128 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக திருச்சி மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சின்னசெட்டித்தெரு, நடுகுஜிலித்தெருக்களில் தலா 14 பேர், டக்கர் சத்திரம் சந்துவில் 12 பேர், திருச்சி பூலோகநாத சுவாமி கோவில் தெரு, சின்ன கம்மாளத்தெருக்களில் தலா 7 பேர், தையல்காரத்தெரு, கிருஷ்ணன் கோவில் தெருக்களில் தலா 6 பேர், கள்ளத்தெருவில் 5 பேர், டக்கர் சந்துவில் 4 பேர், பெரிய கம்மாளத்தெரு, பந்தேகானா தெரு, சமஸ்பிரான் தெரு, மாப்பிள்ளை நாயக்கன் குளத்தெருக்களில் தலா 2 பேர், மேல சாயக்கர தெரு, நடு கள்ளத்தெரு, பெரியகடை வீதி, கீழ சாயக்கரை தெரு, பெரிய செட்டித்தெரு, நடுவளையல்காரத்தெரு, வடக்கு குஜிலித்தெரு, டபிள்யூ.பி. ரோடு, ஒமாந்து பிள்ளை தெரு, வரதராஜபெருமாள் கோவில் தெரு, சந்துகடை, ஜாபர்ஷா தெருக்களில் தலா ஒருவர் என 95 பேரும் மற்றும் சில இடங்களில் 33 பேர் என மொத்தம் 128 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதிகளாக திருச்சி மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் அப்பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பிளச்சிங் பவுடர் தூவப்பட்டு தூய்மை பணியாளர்களால் சுத்தம் செய்யப்பட்டது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 வார்டுகள் உள்ள பகுதிகளில் பெரிய வணிக நிறுவனங்களும், சாலையோர கடைகள் மற்றும் சிறு கடைகளும் உள்ளன. கொரோனா பாதிக்கப்பட்ட 3 வார்டு பகுதிகளையும் தனிமைப்படுத்தும் வகையில் இன்று (சனிக்கிழமை) முதல் தொடர்ந்து 14 நாட்களுக்கு, அரசின் மறு உத்தரவு வரும் வரை வணிக நிறுவனங்கள் மற்றும் சிறு கடைகள் திறக்க தடை விதித்து ஆணையர் சிவசுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். அதே வேளையில் பால் வினியோகம் செய்வதற்கும், மருந்து கடைகள், சிறு மளிகை, காய்கறி கடைகள் திறப்பதற்கும் தடை இல்லை. இந்த அறிவிப்பின் மூலம் 14 நாட்களுக்கு அப்பகுதியில் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் திறக்கப்படமாட்டாது. இதுதொடர்பாக மேற்கண்ட பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று மாலை தண்டோரோ போட்டு அறிவித்தனர். 

Next Story