கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பு அதிகாரியின் கண்காணிப்பு தேவை; தமிழக அரசுக்கு கோரிக்கை


கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பு அதிகாரியின் கண்காணிப்பு தேவை; தமிழக அரசுக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 11 July 2020 4:55 AM GMT (Updated: 11 July 2020 4:55 AM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகத்துடன் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிறப்பு அதிகாரியின் கூடுதல் கண்காணிப்பு தேவை என தமிழக அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களால் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலை மாறி, தற்போது தொடர்புகள் மூலம் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கடந்த 2 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை 200-க்கு மேல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சிவகாசி, விருதுநகர் பகுதிகளில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சிவகாசியில் மட்டும் பாதிப்பு 500-க்கும் மேலாக உள்ளது. இதுதவிர அருப்புக்கோட்டை, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் நோய் பரவல் அதிகரித்து வருகிறது.

மாவட்ட நிர்வாகம் மருத்துவ பரிசோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் தெரிவதற்கு உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த 3 வாரங்களாக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி பரிசோதனை மையத்துக்கு கூடுதல் ஆர்.டி.பி.சி.ஆர். கருவிகள் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்பட்டாலும் இது வரை எந்த முன்னேற்றமும் இல்லை.

சிவகங்கை, நெல்லை மருத்துவ கல்லூரி பரிசோதனை மையங்கள் ஓரளவு கைகொடுத்து வந்த போதிலும் தினசரி 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிய வாய்ப்பு இல்லாத நிலையே நீடிக்கிறது. முடிவுகள் தெரிய தாமதம் ஆவதால் நோய் பரவல் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறும் நிலை உள்ளது.

தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட நிர்வாகத்துடன் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து செயல்பட அரசு செயலாளர் அந்தஸ்தில் சிறப்பு அதிகாரிகளை நியமித்து அவர்கள் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்படும் நிலை உள்ளது. விருதுநகர் மாவட்டத்தை பொருத்தமட்டில் நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி ஒரு முறை மட்டுமே வந்து, சென்ற நிலையில் ஒருங்கிணைந்து செயல்பட மாவட்டத்துக்கு வராத நிலை நீடிக்கிறது.

எந்த நோக்கத்திற்காக அரசு சிறப்பு அதிகாரியை நியமித்ததோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை. இதுபற்றி மாநில சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கவனத்துக்கு கொண்டு சென்றபோது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தநிலையிலும் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

மாவட்ட நிர்வாகம் தடுப்பு நடவடிக்கைகளில் முழு மூச்சுடன் செயல்பட்டாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பு அதிகாரியின் கூடுதல் கண்காணிப்பும் அவசியமாகும். எனவே தமிழக அரசு உடனடியாக இம்மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரியை அனுப்பி வைக்க வேண்டும் என்றும், விருதுநகர் பரிசோதனை மையத்தின் செயல்திறனை அதிகரிக்க கூடுதல் பரிசோதனை எந்திரங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story