தந்தை-மகன் கொலை வழக்கு: சாத்தான்குளத்தில் சி.பி.ஐ. விசாரணை அரசு ஆஸ்பத்திரியில் அதிகாரிகள் ஆய்வு
தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினார்கள்
சாத்தான்குளம்,
தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினார்கள். அவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
தந்தை-மகன் கொலை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி கடை திறந்து வைத்ததாக கூறி போலீசார் அழைத்து சென்று தாக்கினார்கள். பின்னர் கோவில்பட்டி ஜெயிலில் அடைக்கப்பட்ட 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசாரை கைது செய்தனர். மேலும், சி.பி.சி.ஐ.டி. போலீசார் சாத்தான்குளம் போலீஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி, கோவில்பட்டி ஜெயிலில் விசாரணை நடத்தி பல்வேறு ஆவணங்களை சேகரித்தனர்.
சி.பி.ஐ. விசாரணை
இதற்கிடையே, இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இதற்காக டெல்லி சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அனுராக் சின்கா, பூரண்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுஷல் குமார் வர்மா, சச்சின், போலீஸ்காரர்கள் அஜய்குமார், சைலேந்திரகுமார், பவன்குமார் திவேதி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
இந்த 8 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் தூத்துக்குடி வந்தனர். அங்குள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு மாலையில் சென்ற சி.பி.ஐ. குழுவினர் இரவு வரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைப்பற்றிய ஆவணங்களை சரிபார்த்து, விசாரணை நடத்தினார்கள். பின்னர் சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார், வழக்கு ஆவணங்களை சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லாவிடம் ஒப்படைத்தார். இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் அங்கு இருந்து புறப்பட்டு நெல்லையில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கினார்கள்.
சாத்தான்குளம் சென்றனர்
இந்த நிலையில் நேற்று காலையில் சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா தலைமையிலான 6 பேர் 2 குழுக்களாக பிரிந்து 2 கார்களில் நெல்லையில் இருந்து காலை 10 மணி அளவில் சாத்தான்குளம் புறப்பட்டனர். அவர்கள் 11.30 மணிக்கு சாத்தான்குளம் போய் சேர்ந்தனர். அங்கு ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் வீட்டிற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சென்றனர்.
அங்கு இருந்த ஜெயராஜ் குடும்பத்தினரை தவிர மற்ற அனைவரும் வெளியில் அனுப்பப்பட்டனர். வீட்டில் இருந்தவர்களின் செல்போன்கள் அனைத்து வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் சி.பி.ஐ. அதிகாரிகள் வீட்டின் கதவை மூடினார்கள். வீட்டில் ஜெயராஜின் மனைவி செல்வராணி, மகள்கள் பெர்சி, பியூலா, அபிஷா, ஜெயராஜின் சகோதரி ஜெயா, அவரது கணவர் ஜோசப், உறவினர் ஜெயசிங் ஆகியோர் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
உறவினர்களிடம் விசாரணை
இதில் பெர்சிக்கு அம்மை நோய் தாக்கப்பட்டதால், அவர் தனி அறையில் வைக்கப்பட்டு உள்ளார். அங்கு சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் சென்று, பெர்சியிடம் விசாரணை நடத்தினார். சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் அறிக்கையில் உள்ள கேள்விகள் அனைத்தும் உண்மை தானா, ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் தாக்கியது உண்மையா, ஆஸ்பத்திரியில் இருக்கும்போது அவர்களுக்கு நீங்கள் கைலிகள் கொண்டு சென்றீர்களா?, ஆஸ்பத்திரியில் இருக்கும்போது அவர்களிடம் நீங்கள் பேசினீர்களா? என்பது குறித்து கேட்டறிந்து, அவற்றை செல்போனில் பதிவு செய்து கொண்டனர்.
மேலும், உறவினர் ஜெயசிங்கிடம் நடத்திய விசாரணையில், நான் ஆஸ்பத்திரியில் சென்று பென்னிக்சை பார்த்தேன். அவர் என்னை எப்படியாவது ஜாமீனில் எடுத்து விடுங்கள் என்று கூறியதாகவும், குடும்பத்தினர் அனைவரையும் இட்டமொழி அருகே உள்ள வெள்ளான்விளைக்கு அழைத்து செல்லும்படி கூறியதாகவும் தெரிவித்தார். சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்கும் கேள்விக்கு மொழிமாற்றம் செய்து பதில் அளிக்க மதுரையில் இருந்து 2 பேர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஜெயராஜ் குடும்பத்தினர் கூறியதை சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு எடுத்து கூறினார்கள்.
ஆஸ்பத்திரியில் ஆய்வு
இதையடுத்து மாலை 3.55 மணிக்கு ஜெயராஜ் வீட்டில் இருந்து சி.பி.ஐ. இன்ஸ்பெக்டர் அனுராக் சின்கா தலைமையில் 3 பேர் காரில் சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அவர்களுடன் ஜோசப் சென்றார். அவருக்கு இந்தி தெரியும் என்பதால் அவரை அதிகாரிகள் உடன் அழைத்து சென்றனர். அவர் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட இடம், கண்காணிப்பு கேமரா இருந்த இடம் ஆகியவற்றை நேரில் காண்பித்தார்.
மேலும் அவசர சிகிச்சை பிரிவு, மருந்து வழங்கும் இடம், டாக்டர்கள் அறை, எக்ஸ்ரே பிரிவு உள்ளிட்டவைகளை சி.பி.ஐ. அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அவர்கள் அங்கு செல்போன் மூலம் புகைப்படம் எடுத்து வீடியோ பதிவும் செய்து கொண்டனர். மேலும் ஆஸ்பத்திரியில் இருந்த டாக்டர் ஒருவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. 4.45 மணிக்கு விசாரணையை முடித்து விட்டு, அதிகாரிகள் மீண்டும் ஜெயராஜ் வீட்டிற்கு சென்று விட்டனர்.
7 மணி நேரம் விசாரணை
இதற்கிடையே, ஜெயராஜ் வீட்டில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை முடித்து விட்டு மாலை 6.30 மணிக்கு வெளியே வந்தனர். அதாவது சுமார் 7 மணி நேரம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். பின்னர் சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா தலைமையில் அதிகாரிகள் அனைவரும் சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு மீண்டும் புறப்பட்டு சென்றனர். அங்கு சுமார் 15 நிமிடங்கள் ஆய்வு செய்தனர்.
இந்த சம்பவங்களையடுத்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெர்னாட் சேவியர் தலைமையில் ஜெயராஜ் வீட்டின் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும், போலீஸ் நிலையத்திற்கு யாரும் செல்ல முடியாத அளவிற்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டது. அங்கு குற்ற ஆவண காப்பக பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையின்போது மாலை 6 மணி முதல் 6.15 மணிவரை லேசான மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story