கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கடனுதவி வழங்க ரூ.800 கோடி ஒதுக்கீடு கலெக்டர் மலர்விழி தகவல்


கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கடனுதவி வழங்க ரூ.800 கோடி ஒதுக்கீடு கலெக்டர் மலர்விழி தகவல்
x
தினத்தந்தி 12 July 2020 4:00 AM IST (Updated: 11 July 2020 10:20 PM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கடனுதவி வழங்க ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காரிமங்கலம்,

கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கடனுதவி வழங்க ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலெக்டர் மலர்விழி கூறினார்.

அம்மா இருசக்கர வாகனம்

காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் விழா, மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ஆதார நிதி வழங்கும் விழா மற்றும் மகளிர் சுயஉதவிகளுக்கான வங்கி இணைப்பு விழா ஆகியவை நடைபெற்றது. இந்த விழாக்களுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கி 19 பயனாளிகளுக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கினார். 26 பயனாளிகளுக்கு மானிய கடனுதவியாக ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ஆதார நிதியாக ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் ஆகியவற்றை வழங்கினார்.

விழாவில் கலெக்டர் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட அனைத்து பயனாளிகளுக்கும் மானியத்துடன் இருசக்கர வாகனங்கள் வழங்கப்படுகிறது. கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சுய உதவிக்குழுக்கள் மூலமாக கடன் வழங்க தமிழக அரசு தர்மபுரி மாவட்டத்திற்கு ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. அடுத்த 3 மாதத்திற்குள் இந்த தொகை மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் வழங்கப்படும். தற்போது உள்ள சூழ்நிலையில் கிருமிநாசினி திரவம், முககவசம், துணி பைகள் ஆகியவற்றை தயாரிக்க மகளிர் சுயஉதவிக்குழுவினர் முன்வர வேண்டும். அதன்மூலம் அவர்கள் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, ஒன்றியக்குழு தலைவர் சாந்தி பெரியண்ணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் காவேரி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் செல்வராஜ், தாசில்தார் கலைச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டபாணி, மீனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாலக்கோடு

இதேபோன்று பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த விழாவில் கலெக்டர் மலர்விழி கலந்து கொண்டு 154 பயனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களுக்கான ஆணைகளையும், 33 பயனாளிகளுக்கு மானிய கடனுதவி, மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ஆதாரநிதி ஆகியவற்றை வழங்கினார்.

இந்த விழாவில் மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் நாகராஜன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன், ஒன்றியக்குழு தலைவர் பாஞ்சாலை கோபால், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோபால், கூட்டுறவு சங்க தலைவர்கள் சரவணன், சங்கர், வீரமணி, தாசில்தார் ராஜா, பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பழகன், கவுரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story