பெங்களூருவில் தனிமை முகாமில் இருக்கும் போலீசாருடன் காணொலி காட்சி மூலம் போலீஸ் கமிஷனர் பேச்சு ‘கொரோனாவை கண்டு பயப்படாதீர்கள், தைரியமாக இருங்கள்’


பெங்களூருவில் தனிமை முகாமில் இருக்கும் போலீசாருடன் காணொலி காட்சி மூலம் போலீஸ் கமிஷனர் பேச்சு ‘கொரோனாவை கண்டு பயப்படாதீர்கள், தைரியமாக இருங்கள்’
x
தினத்தந்தி 12 July 2020 4:00 AM IST (Updated: 11 July 2020 11:49 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் தனிமை முகாமில் இருக்கும் போலீசாருடன் காணொலி காட்சி மூலமாக நேற்று போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் பேசினார்.

பெங்களூரு, 

பெங்களூருவில் தனிமை முகாமில் இருக்கும் போலீசாருடன் காணொலி காட்சி மூலமாக நேற்று போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் பேசினார். தைரியமாக இருக்கும்படி போலீசாரிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

போலீஸ் கமிஷனர் பேச்சு

பெங்களூருவில் போலீசாருக்கு கொரோனா வைரஸ் வேமாக பரவி வருகிறது. நகரில் 500-க்கும் மேற்பட்ட போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதித்த போலீசாருடன் தொடர்பில் இருந்ததாக 600-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள போலீஸ்காரர்கள் நகரில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தனிமை முகாமில் இருக்கும் போலீஸ்காரர்களுடன் நேற்று திடீரென்று போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் காணொலி காட்சி மூலமாக பேசினார். அப்போது தனிமை முகாமில் இருக்கும் போலீஸ்காரர்களிடம் அடிப்படை வசதிகள், சாப்பாடு எந்த பிரச்சினையும் இன்றி கிடைப்பது குறித்து கேட்டு அறிந்து கொண்டார்.

அறிக்கை கிடைக்கவில்லை

அந்த சந்தர்ப்பத்தில் ஒரு போலீஸ்காரர் தனக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு இருப்பதாகவும், ஆனால் ஒரு வாரம் ஆகியும் அறிக்கை இன்னும் வரவில்லை என்று போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவிடம் குற்றச்சாட்டு கூறினார். உடனே அவர், அறிக்கை தாமதமாக கிடைப்பதால் கவலைப்பட வேண்டாம், உங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்காது, நீங்கள் தைரியமாக இருங்கள், எதை பற்றியும் கவலைப்படாதீர்கள் என்று தெரிவித்தார்.

அதே நேரத்தில் தனிமை முகாமில் இருக்கும் போலீஸ்காரர்கள் மனதைரியத்துடன் இருக்க வேண்டும் என்றும், கொரோனா கண்டு பயப்பட வேண்டாம் என்றும், சரியான சிகிச்சை பெற்றால் குணமடைந்து விடலாம் என்றும் போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் தெரிவித்தார்.

Next Story